இராவணன் பயன்படுத்திய பொருட்களென AI புகைப்படங்கள் பகிரப்படுகின்றன
இராவணன் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.
by Anonymous |
மார்ச் 28, 2024
வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இராவணன் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக புகைப்படங்களுடன் செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
பகிரப்படும் செய்தி :- ” கிளிநொச்சியில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாம். அத்தோடு இவை இராவணனின் பயன்படுத்தியாக கருதப்படுகிறது. இவை இராவணன் பயன்படுத்திய புட்பக விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று கருத்படுகிறதாம். இதனை ஆராய்வதற்காக ஜப்பானிய தொல்பொருள் ஆய்வாளர்கள் வருகிறாராகளாம்.
சிங்கள செய்தியொன்றை மேற்கோள்காட்டி குறித்த பதிவானது முகப்புத்தகம் மற்றும் எக்ஸ் தளத்திலும் அதேபோல் யூடியுப்பில் காணொளி வடிவிலும் பகிரப்பட்டு வருகின்றது.
ஆகவே இதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக factseeker, இப் புகைப்படங்கள் குறித்து ஆராய்ந்து பார்த்ததில் இது AI தொழினுட்பத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட போலியான புகைப்படங்கள் என்பதை கண்டறிய முடிந்தது.
போலியாக உருவாக்கப்பட்டு பகிரப்படும் புகைப்படங்கள் :
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட புகைப்படங்களில் ஒன்று
முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படங்களில் ஒன்று
இவ்வாறு பகிரப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தபோது, இது AI தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான புகைப்படங்கள் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
அதேபோல் இதனை உருவாக்கிய நபர் தனது முகநூல் பக்கத்தில் குறித்த புகைப்படங்களை பதிவேற்றியுள்ளதுடன், இந்த AI புகைப்படங்களை பலர் பகிர்ந்துள்ளனர். அவ்வாறு பகிரப்பட்ட புகைப்படங்களே தற்போது பலரது கற்பனைக் கருத்துக்களுடன் பகிரப்பட்டு வருகின்றது என்பதையும் factseeker உறுதிப்படுத்துகிறது.
இது குறித்து இலங்கை வரலாற்று ஆய்வாளரும், பேராசிரியருமான பரமு புஷ்பரட்ணம் தெரிவிக்கையில், இவ்வாறான புகைப்படங்கள் போலியானவை என்பதுடன் மக்களை குழப்பும் செயற்பாடாகும். தொல்லியல் திணைக்களம் இவ்வாறான எந்தவித பொருட்களையும் அடையாளம் காணவோ அல்லது ஆய்வுகளை முன்னெடுக்கவோ இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
முடிவு
ஆகவே இராவணன் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.