இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சர்கள் குறித்த குழப்பம்

இது வாக்காளர்களை குழப்பமடையச் செய்யும் விடயம் என்பதால், வாக்காளர்கள் இது பற்றிய தெளிவைப் பெறுமாறு factseeker வலியுறுத்துகின்றது
by Anonymous |
ஆகஸ்ட் 23, 2024

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ‘நாமல் ராஜபக்ச’ என்ற பெயரில் இரு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் இவ் வேட்பாளர்களின் பெயர்கள் தொடர்பில் பிரதான ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் குழப்பகரமாக பல்வேறு செய்திகள் பிரசுரிக்கப்படுவதை அவதானிக்க முடிந்தது.

மேலும் இவர்கள் இருவரின் பெயரும் வாக்காளர்களை குழப்பும் வகையில் காணப்படுவதால் இதை தெளிவுபடுத்துமாறு factseeker இற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த விவகாரத்தை தெளிவுபடுத்தும் விதமாக factseeker ஆராய்ந்து பார்த்ததில், இவர்கள் இருவர் குறித்தும் முழுமையான தேடலில் ஈடுபட்டோம். இதன்போது பொதுவாக பகிர்ந்துகொள்ளக்கூடிய அடிப்படை விடயங்களை இங்கே வழங்கியுள்ளோம்

லக்ஷ்மன் நாமல் ராஜபக்ச 
அரசியல் கட்சி : ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
சின்னம்               : தாமரை மொட்டு
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் நாமல் ராஜபக்சவின் முழுப் பெயர் “லக்ஷ்மன் நாமல் ராஜபக்ச”. அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றார். நாமல் ராஜபக்ச என்று பிரபலமாக அறியப்படும் இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ஆவார்.
அத்துடன், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவான அவர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அதேபோல், கடந்த காலங்களில் பல்வேறு அமைச்சுப்பதவிகளையும் வகித்துள்ளார்.
நாமல் அஜித் ராஜபக்ச 
அரசியல் கட்சி : சமநிலம் கட்சி
சின்னம்               : கடித உறை
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நாமல் அஜித் ராஜபக்சவின் முழுப் பெயர் “ராஜபக்ச ஆராச்சிலாகே நாமல் அஜித் ராஜபக்ச”. இவர் சமநிலம் கட்சி சார்பில் கடித உரை சின்னத்தில் போட்டியிடுகின்றார். இவர் தொழில் ரீதியாக ஒரு சட்டத்தரணி ஆவர்.
இவர்கள் இருவரும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற நிலையில், வேட்புமனுத் தாக்கலின் பின்னர் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட பட்டியலில் இருவரினதும் பெயர்கள் ஒன்றாகவே காணப்படுகின்றன. தேர்தல் வாக்குச்சீட்டில் இருவரது பெயர்களும் “நாமல் ராஜபக்ச” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, இது வாக்காளர்களை குழப்பமடையச் செய்யும் விடயம் என்பதால், வாக்காளர்கள் இது பற்றிய தெளிவைப் பெறுமாறு factseeker வலியுறுத்துகின்றது.
 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            