இந்த வாகனப்பேரணி ஜனாதிபதி அநுரவின் பாதுகாப்புக்கானது அல்ல

இது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணிக்கான ஒத்திகையின் போது எடுக்கப்பட்ட காணொளி ஆகும்.
by Anonymous |
ஏப்ரல் 4, 2025

பெரும் பாதுகாப்புடன் பாதையில் பயணிக்கும் வாகன பேரணியொன்றின் காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
“அநுரவை இப்போது பிடிக்க முடியாது. மூன்று வாகனங்களில் சென்றால் அது நான் என்றார். இதோ இங்கு 22 வாகனங்கள் செல்கின்றன”, “மறுமலர்ச்சி இப்போது முன்னேறிவிட்டது தோழர்களே” போன்ற பதிவுகளுடன் இக்காணொளி பல சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தன.
- https://www.facebook.com/watch/?mibextid=wwXIfr&v=516287048223798&rdid=U4ArE4YA1GhYy72b
- https://www.youtube.com/shorts/Zkg-GlQJ3RM
- https://x.com/milanravi86/status/1907449598160916682

இக் காணொளி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வாகனப் பேரணி என்ற சித்தரிப்புடன் இப் பதிவுகள் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
அக் காணொளியை அவதானித்த போது, அப் பேரணியில் சென்ற வாகனமொன்றின் இலக்கத்தகட்டில் “DL 2 CBD 1614” என்ற எண் காணப்பட்டது. இத்தகைய இலக்கம் இலங்கை போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கும் பதிவிலக்கம் அல்ல. எனவே, இது இலங்கையைச் சேர்ந்த வாகனம் அல்ல என்பதுடன் இந்தியாவின் வாகனம் என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், இக் காணொளி குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சளார் புத்திக மனதுங்கவிடம் FactSeeker வினவிய போது, “இந்த காணொளி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வாகனப் பேரணி அல்ல. இது இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு வரவிருக்கும் நிலையில், அவரது வாகன பேரணியின் ஒத்திகையின் போது எடுத்ததொன்றாகும்” என உறுதிப்படுத்தினார்.
இது குறித்து மேலும் ஆராய்ந்ததில், AFP புகைப்பட ஊடகவியலாளர் இஷார கொடிகாரா தனது முகநூல் பக்கத்தில் இக்காணொளியுடன் ஒத்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணியின் ஒத்திகை இன்று கொழும்பில் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆகவே, சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற வாகன பேரணியின் காணொளி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வாகன பேரணி அல்ல என்பதையும் இது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணிக்கான ஒத்திகையின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகின்றது.
 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                    