இந்திரகுமார் பத்மநாதன் 25000 இலங்கை மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கி வருவதாக போலிச்செய்தி

25000 மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவது கடினமானதொரு காரியம் என்று MagickWoods நிறுவனத்தின் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
by Anonymous |
அக்டோபர் 14, 2024

MagickWoods நிறுவனத்தின் ஸ்தாபகரும் SLIIT Northern University இன் தலைவரும் தென்னிந்திய நடிகை ரம்பாவின் கணவருமான இந்திரகுமார் பத்மநாதன், இலங்கை மாணவர்கள் சுமார் 25000 பேருக்கு இலவச கல்விக்கான உதவிகளை வழங்கி வருவதாக கூறும் செய்திகளுடன் கூடிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
அவ்வாறு பகிரப்பட்ட புகைப்படத்தில் “இலங்கையில் படிக்க முடியாத ஏழை தமிழ் மாணவர்கள் சுமார் 25000 ஆயிரம் பேருக்கு இலவச கல்வி கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்கள் படித்து முடித்தவுடன் வேலையும் வாங்கி தந்து வருகிறார்கள் நடிகை ரம்பா மற்றும் அவரது கணவர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது trendy spot எனும் இந்தியாவின் youtube ஊடகமொன்றின் செய்தி என்பதையும் அறிய முடிந்தது.
அவ்வாறு பகிரப்பட்டுள்ள பதிவுகளுக்கு பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருவதால் factseeker இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தது.
இது தொடர்பான செய்திகள் இலங்கையின் பிரதான செய்தி தளங்களில் வெளியாகி உள்ளதா என ஆராய்ந்ததில் அவ்வாறு செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இது தொடர்பில் இந்திரகுமார் பத்மநாதனின் நிறுவனமான MagickWoods நிறுவனத்தின் பணிப்பாளர் ப்ரேவோ ஹெண்டியிடம் factseeker வினவிய போது, இது முற்றிலும் பொய்யான தகவல் எனவும் 25000 மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவது கடினமானதொரு காரியம் என்றும் சிறிய எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு புலமைபரிசீல்கள் சில வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து SLIIT Northern University தலைவர் இந்திரகுமார் பத்மநாதன், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்தப் நேர்க்காணல் ஒன்றை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது. அக் காணொளியில் இந்திரகுமார் பத்மநாதன் “இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், கல்லூரிக் கல்வியை படிக்க முடியாத நிலையில் உள்ள மக்களின் கனவை நனவாக்கும் வகையில் SLIIT Northern University தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், “SLIIT Northern University ஆனது 30 ஏக்கர் பரப்பளவில் 20,000 மாணவர்கள் படிக்கும் திட்டத்துடன், தொழில்நுட்ப மற்றும் வேலை வாய்ப்புகளால், இலங்கையின் வடக்கு பகுதியின் அடுத்த கல்வி மற்றும் தொழில்நுட்ப மையமாக மாறும்.” எனவும் தெரிவித்துளார்.
அக் காணொளியில் இணைப்பு : https://shorturl.at/GwgJp
ஆகவே, இந்திரகுமார் பத்மநாதன் 25000 பேருக்கு இலவச கல்வி வழங்கி வருவதாக பகிரப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.