இந்தியாவில் இருந்து செயற்கை முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக பரவும் காணொளி போலியானது

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துகள் எழுந்தன. அத்துடன் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை உண்பதில் மக்களிடையே அச்சமும் எழுந்துள்ளது.
by Anonymous |
நவம்பர் 13, 2023

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துகள் எழுந்தன. அத்துடன் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை உண்பதில் மக்களிடையே அச்சமும் எழுந்துள்ளது.
இந்நிலையில், செயற்கையாக தயாரிக்கப்பட்ட முட்டைகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சமீப காலமாக பகிரப்பட்டு வருகின்றது. “இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும் முட்டைகளை உண்பதற்கு முன் இதைப் பாருங்கள்”என பதிவிடப்பட்ட காணொளியொன்றே இவ்வாறு பகிரப்படுகின்றது.
காணொளி : https://www.facebook.com/watch/?extid=CL-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&mibextid=Nif5oz&v=756676292891875
இது குறித்து நுகர்வோர் அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டாரவிடம் Factseeker வினவியபோது, இவ்வாறு பகிரப்படும் செய்தியானது முற்றிலும் பொய்யான செய்தி என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் சந்தைக்கு விடப்படுவதற்கு முன்னர் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் பரிசோதிக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றியே முட்டைகள் சந்தைக்கு விடப்படுவதாகவும் அவர் கூறினார்.
அரச வணிக இதர சட்டப்பூர்வக் கழகத்தின் ஊடாகவே இந்திய முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இது தொடர்பில் அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தரவிடம் Factseeker வினவியபோது, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டைகள் உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள மூன்று ஆய்வகங்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட பின்னர் உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவின் கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகளும் 15 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் முட்டையின் விலை வேகமாக அதிகரித்த காரணத்தினால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய முடிவு செய்ததாக கூறிய அவர், இந்த ஆண்டு ஏப்ரலில் முட்டைகளை இறக்குமதி செய்யத் தொடங்கியதில் இருந்து கடந்த 5 மாதங்களாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் இதுவரை சுமார் 100 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு கொள்கலனில் இருந்து 300 முட்டைகளை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதித்த பின்னரே சுங்கத்திலிருந்து முட்டைகள் விடுவிக்கப்படுவதாகவும், அதற்காக சுமார் 04 நாட்கள் வரை எடுத்துக்கொள்கின்றது எனவும் ஆசிறி வலிசுந்தர மேலும் தெரிவித்தார்.
முடிவுரை
இதன்படி, சமூக ஊடகங்கள் ஊடாக பகிரப்படுவதற்கு அமைய, தயாரிக்கப்படும் செயற்கை முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகள் அல்ல என்பதை Factseeker உறுதிப்படுத்துகிறது.
மேலும் இந்த காணொளியில் காண்பிக்கப்படுவதானது சீனாவில் தயாரிக்கப்படும் ஒரு வகை விளையாட்டு முட்டைகளாகும். இந்த காணொளியானது 2017 ஏப்ரல் 11ஆம் திகதி அன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது என்பதையும் Factseeker உறுதிப்படுத்துகிறது. அது குறித்த காணொளி இங்கே : https://www.facebook.com/watch/?v=1013013619717938