இது லால்காந்த அண்மையில் தெரிவித்த கருத்தா ?

இந்த காணொளி 03.11.2013 அன்று ஜே.வி.பி ஸ்ரீலங்கா யூடியூப் என்ற பக்கத்தில் ஒளிபரப்பப்பட்டுள்ளது
by Anonymous |
ஜூலை 24, 2024

தனது ஆட்சியின் கீழ் பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து இலங்கை வெளியேறும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த கூறிய காணொளியொன்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
குறிப்பாக இந்தக் காணொளி X பக்கத்திலும் அதேபோல் முகநூல் பக்கத்திலும் அதிகளவில் பகிரப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.
தேசிய மக்கள் சக்தியின் அண்மைய பிரசார கூட்டமொன்றில் அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் எனவும், தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் அக்கட்சியை விமர்சிக்கும் விதத்திலும் இந்தப்பதிவு பலராலும் பகிரப்படுகின்றது.
இந்தக் காணொளியை மேற்கோள்காட்டி லங்கா சீ நியூஸ் மற்றும் எலகிரி (Elakiri) என்ற இணையத்தளங்கள் செய்திகளையும் வெளியிட்டுள்ளனர்.
அதற்கமைய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த இவ்வாறான கருத்தை வெளியிட்டாரா? எப்போது வெளியிட்டார் என factseeker ஆராய்ந்து பார்த்ததில், இது 2013ஆம் ஆண்டு நவம்பரில் அவர் தெரிவித்த கருத்து என்பது தெரியவந்துள்ளது.
இந்த காணொளி 03.11.2013 அன்று ஜே.வி.பி ஸ்ரீலங்கா யூடியூப் என்ற பக்கத்தில் ஒளிபரப்பப்பட்டுள்ளதுடன், அந்த மக்கள் சந்திப்பில் லால்காந்த இந்தக் கருத்துக்களை பதிவு செய்துள்ளார் என்பதையும் factseeker இனால் உறுதிப்படுத்த முடிந்தது.
Link :https://youtu.be/h2gjO05ZWJA?t=1009
இதன்படி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்தவின் இந்தக் கூற்று அண்மைக்கால அறிக்கையல்ல எனவும் எனினும் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவரால் தெரிவிக்கப்பட்ட கருத்து எனவும் factseeker உறுதிப்படுத்துகிறது.