ஆழ்கடலில் சிவபெருமானின் சிலை இருப்பதாக பகிரப்படும் AI காணொளி

தற்போதைய தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இது போன்ற நம்பகமான மற்றும் யதார்த்தமான புகைப்படங்களையும் காணொளிகளையும் உருவாக்க முடியும்.
by Anonymous |
டிசம்பர் 17, 2024

ஆழ்கடலில் சிவபெருமானின் சிலை இருப்பதாக காணொளி ஒன்று X தளத்தில் பகிரப்படுவதை FactSeeker அவதானிக்க முடிந்தது. “காலத்தால் அழியாத சனாதன தர்மத்திற்கு சமுத்திரம் தலைவணங்குகிறது” என்ற பதிவுடன் இக்காணொளி பகிரப்படுகின்றது.
இக்காணொளிக்கு பலரும் இது உண்மையென தமது கருத்துகளை பதிவிட்டு வருவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இது போன்ற சிவன் சிலை ஆழ்கடலில் அமைந்துள்ளதா என இணையதளத்தை ஆராய்ந்ததில் இது தொடர்பான நம்பக்கூடிய தகவல்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், இது குறித்து ஆராய்ந்ததில், BehindwoodsO2 என்ற youtube பக்கத்தில் இக் காணொளி வெளியிட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. அக் காணொளியில் இது செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இக் காணொளியை போன்றே ஆழ்கடலில் உள்ள புத்தர் சிலையின் புகைப்படம் ஒன்றை அவதானிக்க முடிந்தது. இப் புகைப்படம் MidJourney எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருவியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதையும் அறிய முடிந்தது. இப் புத்தர் சிலையின் புகைப்படம் மற்றும் மேலே குறிப்பிடப்பட்ட சிவன் சிலை காணொளியின் சில அம்சங்களிலும் வண்ணத் தோற்றங்களிலும் ஒற்றுமை காணப்படுவதால் இக் காணொளி செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
ஆகவே, ஆழ்கடலில் சிவபெருமானின் சிலை இருப்பதாக X தளத்தில் பகிரப்படுகின்ற காணொளி செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.