அஷேன் சேனாரத்ன கொழும்பில் 08 வாக்குகள் பெற்றாரா?
சுயேச்சை குழு 15 இன் தேசிய பட்டியலில் அஷேன் சேனாரத்ன சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
by Anonymous |
நவம்பர் 20, 2024
“இலங்கையின் பிரபல சமூக ஊடக செயற்பட்டாளரான அஷேன் சேனாரத்ன கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய பட்டியலில் போட்டியிட்டு 8 வாக்குகளை பெற்றார்.” என சில பதிவுகள் சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
அப் பதிவுகள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்தது.
கொழும்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழு ஒன்றின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட அஷேன் சேனாரத்னவின் முதலாவது வேட்பு மனு, அங்கீகரிக்கப்படாத ஒருவரால் கையளித்ததாகக் கூறி நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் கொழும்பு மாவட்டத்தில் சாவிக்கொத்து சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவிற்கு வாக்களித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை வழங்குமாறு தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக விளம்பரம் செய்திருந்தார்.
https://www.facebook.com/share/r/1B6VApzctQ/
கொழும்பு மாவட்டத்தில் சுயேட்சை குழு 15 ‘சாவிக்கொத்து’ சின்னத்தில் போட்டியிட்டுள்ளதை அறிய முடிந்தது. அச் சுயேச்சை குழு வேட்பாளர்கள் பட்டியலில் அஷேன் சேனாரத்னவின் பெயர் உள்ளதா என ஆராய்ந்ததில் அதில் அவரது பெயர் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், சுயேச்சை குழு 15 இன் தலைவராக போட்டியிட்ட கலாநிதி சசிந்து மஹாநாமவின் முகநூல் பக்கத்தை ஆராய்ந்ததில் அஷேன் சேனாரத்ன ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த காணொளி ஒன்றை அவதானிக்க முடிந்தது.
https://www.facebook.com/share/r/12DkPXfXG4P/
அக் காணொளியில், சுயேச்சை குழு 15 இன் தேசிய பட்டியலில் அஷேன் சேனாரத்ன சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இவ்வருட பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழு 15 பெற்ற வாக்குகள் தொடர்பில் FactSeeker ஆராய்ந்தது.
உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின்படி சுயேச்சைக் குழு 15 ‘1792’ வாக்குகளையும் அதில் 8 தபால் மூல வாக்குகளையும் பெற்றுள்ளதை உறுதிப்படுத்த முடிந்தது.
https://election.news.lk/parliamentary-election-2024/colombo/colombo-district-final
https://election.news.lk/parliamentary-election-2024/colombo/colombo-ds-postal-vote
ஆகவே, “அஷேன் சேனாரத்ன கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய பட்டியலில் போட்டியிட்டு 8 வாக்குகளை பெற்றார்” என சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பதிவுகள் உண்மைக்கு புறம்பானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.