அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவில்லையா?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது
by Anonymous |
செப்டம்பர் 13, 2024
அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் PAFFEREL அமைப்பு தெரிவித்ததாக “மொனரா” பத்திரிகையில் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றை factseeker இனால் அவதானிக்க முடிந்தது. எனினும் இந்த செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளதை அடுத்து factseeker இது குறித்து ஆராய்ந்து பார்த்தது.
மொனரா பத்திரிகையில் வெளியிட்டிருந்த செய்தியில், “அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்து வருகின்ற போதிலும் அவ்வாறான அமைச்சரவை அங்கீகாரம் எதுவும் பெறப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு வெளிப்படுத்துகின்றது, இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் வினவிய போது, அவ்வாறான அமைச்சரவை அங்கீகாரம் எதுவும் வழங்கவில்லை என்பதை ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது” என்றும் “இது தொடர்பில் PAFFEREL நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன எட்டியாராச்சி தெரிவிக்கையில், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான எந்தவொரு அமைச்சரவைப் பத்திரமும் இல்லை. அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் PAFFEREL அமைப்பும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.” என்றும் குறிப்பிடப்பட்டுட்டுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அண்மைய நாட்களில் வெளியான செய்திகளுக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரமே அடிப்படையாக அமைந்தது.
22.08.2024 அன்று ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட செய்தியில் , “தற்போதுள்ள பணவீக்கம், பொருளாதார நிலை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2025 ஜனவரி மாதம் முதல் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக ரூ. 25,000 உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் உதய செனவிரத்ன தெரிவித்தார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
02.09.2024 அன்று ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் “2025 ஆம் ஆண்டிலிருந்து அரச ஊழியர்களுக்கு 24 – 50 சதவீதம் வரையிலான சம்பள உயர்வு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
03.09.2024 அன்று ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் “2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்ற வகையில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு அமைவான ஒதுக்கீடுகளுக்கு திறைசேரியின் இணக்கப்பாட்டுடன் அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப் பெற்றிருப்பதாக குறித்த அறிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்த நிபுணத்துவ குழுவின் தலைவர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதே நாளில் வெளியிடப்பட்ட மற்றுமொரு அறிவித்தலில் “அரச சேவையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான பரிந்துரைகளை உள்ளடக்கிய உதய ஆர். செனவிரத்ன ஜனாதிபதி நிபுணத்துவக் குழுவின் இறுதி அறிக்கையின் அடிப்படையில், முப்படைகளில் பணியாற்றும் அனைவரினதும் அடிப்படை சம்பளம், 2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுகிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட தபால் மூல வாக்களிப்பு செப்டெம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. அந்த நாட்களில் வாக்களிக்க முடியாதவர்கள் செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிளில் வாக்களிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த நாட்களிலே இவ் வர்த்தமானிகள் வெளியிடப்பட்டிருந்தன என்பதை factseeker இனால் அறிய முடிந்தது.
மொனரா பத்திரிகையில் செப்டெம்பர் 09 ஆம் திகதி “அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை” என செய்தி வெளியிட்டதையடுத்து செப்டம்பர் 10 ஆம் திகதி ஜனாதிபதி ஊடகப் பிரிவு மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது. அதில், “2025ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான அமைச்சரவை அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை என வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை” என்றும் “சம்பள உயர்வுக்கு தேவையான அனுமதிகள் ஏற்கனவே கிடைத்துள்ளதால், அரச துறையில் சம்பள உயர்வு திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்தப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் உண்மை தன்மையை அறிய, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதா என்பதை அரசாங்க செய்தித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ செய்தித் தளமான www.news.lk இணையத்தளத்தை factseeker ஆராய்ந்தது.
அதில், 2024.05.27 அன்று வெளியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை அவதானிக்க முடிந்தது. அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்படி, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அந்த குழுவின் இடைக்கால அறிக்கையை 24/1609/601/097 அமைச்சரவை பத்திரத்தின் கீழ் 08-12-2024 அன்று அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.அமைச்சர்கள் குழுவின் இந்த இடைக்கால அறிக்கையை பரிசீலித்து விவாதித்த பின்னர், அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட பின்வரும் முன்மொழிவுகளுக்கு கொள்கை ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்த நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. இது 2024-08-12 அன்று வெளியிடப்பட்ட அமைச்சரவையின் முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி,
• 2025 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு சீராக்கல்கள் மற்றும் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள அனைத்துக் கொடுப்பனவுகளையும் ஒருங்கிணைத்து அனைத்து அரச ஊழியர்களுக்கும் (ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தம் செய்யும் அடிப்படையில்) வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக மாதாந்தம் 25,000 ரூபாவை வழங்கல்.
• அரச சேவையின் ஆகக் குறைந்த ஆரம்ப மாதாந்தச் சம்பளத்தை ஆகக் குறைந்தது 24% வீதத்தால் அதிகரித்து வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுடன் மொத்தச் சம்பளமாக ரூபா 55,000/- வரை அதிகரித்து ஏனைய அனைத்துப் பதவிகளுக்குமான அடிப்படைச் சம்பளத்தை அதற்கேற்புடைய வகையில் சீராக்கல்.
போன்ற பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை கடந்த 3ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் பரிந்துரைகளின்படி, பொதுச் சேவைகளின் வகைப்பாடு, அரசு ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள், ஓய்வூதிய வேறுபாடுகளை நீக்குதல், விதவைகள், கணவனை இழந்தவர்கள் மற்றும் ஆதரவற்றோர் தொடர்பான பரிந்துரைகள், திருத்தங்கள் 01.01.2025 முதல் நடைமுறைப்படுத்துவதற்கு கொள்கை ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. மற்றும் அந்த பரிந்துரைகள் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என கடந்த 10 ஆம் திகதி ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன, அமைச்சரவைப் பத்திரத்தை ஊடகங்களுக்கு சமர்ப்பித்த பின், கடந்த 10ஆம் திகதி அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பான காணொளி
https://www.facebook.com/share/v/4ysGBaaiEMn7Yfwf/
இது தொடர்பில் சமூகத்தில் பேசுபொருளொன்று எழுந்துள்ள வேளையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. “அதில் அரச துறையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மறுசீரமைப்பது தொடர்பான இறுதி அறிக்கை” என தலைப்பு இடப்பட்டிருந்தது.
இது குறித்து அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவிடம் factseeker வினவியபோது, இதுவே உண்மையான அமைச்சரவை பாத்திரம் என்பதை உறுதிப்படுத்தினார்.
ஆகவே,அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என தெரிவிக்கும் அறிக்கைகள் மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.