அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டால் பொலிஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதா?

தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் பேரில் இந்த இடமாற்றங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளும் உண்மைக்கு புறம்பானவை
by Anonymous |
அக்டோபர் 18, 2024

‘‘அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டால் பொலிஸ் அதிகாரி கிராமத்திற்கு இடமாற்றம்’’ என்ற தலைப்பில் கடந்த 11 ஆம் திகதி “அருண” பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றை மேற்கோள்காட்டி பிரதான ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் சில பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.
11.10.2024 வெள்ளிக்கிழமை அன்று ‘அருண’ பத்திரிகையில் வெளியான செய்தி பின்வருமாறு,
“அநுராதபுரம் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரை மன்னாருக்கு இடமாற்றம் செய்த சம்பவத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு தனது கிராமத்தில் நியமனம் வழங்கும் நோக்கில் அரசியல்வாதி ஒருவரின் தலையீடு இருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த இடமாற்றம், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்களின் பரிந்துரையில் இடம்பெறுள்ளது. இதன்படி, பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எஸ்.தர்மதாச அனுராதபுரம் பிரிவில் இருந்து மன்னாருக்கும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எல்.விதான அனுராதபுரத்திற்கும் மாற்றப்பட்டார். இது அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டால் இடம்பெற்றதாக பொலிஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவவிடம் factseeker வினவிய போது, “இந்த இடமாற்றங்கள் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அங்கீகரிக்கப்பட்ட இடமாற்றங்கள் என்றும் தேர்தல் காலம் என்பதால் இந்த செய்திகளை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இவ் இடமாற்றம் குறித்த செய்திகளை அனுப்புவது தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் இடம்பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து தேசிய போலீஸ் ஆணைக்குழுவிடம் FactSeeker வினவிய போது, தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபருக்கும் இந்த இடமாற்றங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், அப்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க இது தொடர்பான பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
26.07.2024 அன்று தேர்தல் ஆணையம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை அறிவித்தது முதல் ஜனாதிபதி தேர்தல் காலம் ஆரம்பமானது. தேர்தல் காலத்தில், அரச சேவையில் சில நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான அனுமதிக்கு தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரைப்பதே தற்போதைய நடைமுறையாகும்.
இது தொடர்பில் மேலும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் வினவிய போது, பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களின் இடமாற்றங்களுக்கான அங்கீகாரத்திற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுதாக தெரிவித்தனர்.
கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார். அதில் “தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே இந்த இடமாற்றங்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்தார்”.
மேலும், அதே ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ, “இந்த இடமாற்றங்கள் பல மாதங்களுக்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டதாகவும், தேர்தல் காலம் என்பதால், அதற்கான அனுமதியுடன் அண்மையில் இது தொடர்பான அறிவிப்புகள் அனுப்பப்பட்டதாகவும்” தெரிவித்தார்.
ஆகவே, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே இந்த இடமாற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்பதையும் இது “அரசாங்கத்தின் தலையீட்டால்” நடந்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.
மேலும், தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் பேரில் இந்த இடமாற்றங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளும் உண்மைக்கு புறம்பானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.