அரசாங்கத்தின் காணி அபகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் கருத்து தவறானது

காணி அபகரிப்பு தொடர்பில் எமது அரசாங்கம் வர்த்தமானி எதனையும் வெளியிடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்த கருத்து தவறானது.
by Anonymous |
மே 5, 2025

சக்தி தொலைக்காட்சியில் கடந்த மே தினத்தன்று (01 ) ஒளிபரப்பான சமர் அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனிடம், அரசாங்கத்தின் காணி அபகரிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.”மக்களின் காணிகளை கபளீகரம் செய்யும் வர்த்தமானியை அரசாங்கம் ரத்து செய்யமாட்டார்களா?” என்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கூற்றை மேற்கோள்காட்டியே இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது.
கேள்வி – சுமந்திரன் அவர்கள் மேதின கூட்டத்தில் ஒரு சவால் விடுத்திருந்தார். “யாழ்ப்பாணத்திலே 5940 ஏக்கர் காணி கபளீகரம் செய்யும் அரசாங்கம். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். சவால் விடுக்கின்றோம். மக்களின் காணிகளை கபளீகரம் செய்யும் வர்த்தமானியை ரத்து செய்ய மாடீர்களா?” என கேட்கிறார். இந்த விடயம் உங்களுக்கு தெரியுமா?
இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்,”இன்றைக்கு அவ்வாறான வர்த்தமானியை எமது அரசாங்கம் வெளியிட்டதாக சிரிப்பாக இருக்கிறது. அவர் எதை வைத்து கூறுகிறார் என்று தெரியவில்லை. இவ்வாறான பல போலியான தகவல்களை வெளியிடுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இது குறித்துக் கருத்து தெரிவித்தாரா என FactSeeker ஆராய்ந்த போது,மே மாதம் 01ஆம் திகதி இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் இது தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.மேலும்,காணி அபகரிப்பு தொடர்பான ஒரு காணொளியையும் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.
அக் காணொளியில், காலை முரசு பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டே தனது கருத்துகளை பதிவு செய்திருந்தார்.
மேலும், காலை முரசு பத்திரிகையை ஆராய்ந்த போது, மே மாதம் 1 ஆம் திகதி அப் பத்திரிகையில் “வடக்கில் 5940 ஏக்கர் நிலத்தை அரசு இரகசியமாகக் கபளீகரம்!” என்ற தலைப்பில் செய்தியொன்று வெளியாகியிருந்தது . அச் செய்தியில் “வடக்கு மாகாணத்தில் ஐயாயிரத்து 940 ஏக்கர் நிலம் அரச உடமையாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தமைக்கு அமைய அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விடயங்களை ஆராய்ந்ததில், இந்த வர்த்தமானியானது கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி காணி தொடர்பான வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் அதில் 2430 இலக்கமிட்ட அவ் வர்த்தமானியில் “வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகள் 3 மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால்,அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் என அவ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://documents.gov.lk/view/gazettes/2025/3/2025-03-28(III-0)T.pdf
ஆகவே, கடந்த மே மாதம் 1 ஆம் திகதி சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமர் அரசியல் நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அரசாங்கத்தின் காணி அபகரிப்பு தொடர்பில் எமது அரசாங்கம் வர்த்தமானி எதனையும் வெளியிடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்த கருத்து தவறானது என்பதையும் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி காணி தொடர்பான வர்த்தமானி ஒன்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.