அரகலய போராட்டத்தின் போது நாட்டை விட்டு வெளியேறியது நாமலில் ‘அப்பா’ அல்ல
“அப்பா நாட்டை விட்டு வெளியேறியது தவறு” என எழுதப்பட்ட பதிவினையே சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவு தவறானது என்பது factseeker சுட்டிக்காட்டுகின்றது.
by Anonymous |
அக்டோபர் 12, 2023
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் புதல்வரும், முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக் ஷ அண்மையில் இந்தியாவின் தந்தி TVக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.
இந்த நேர்காணலுக்கான விளம்பரமொன்றை தந்தி TV தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த நிலையில் அதில் “அப்பா நாட்டை விட்டு வெளியேறியது தவறு” என தலைப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது.
இந்த விளம்பரப்படமே தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில், நாட்டை விட்டு வெளியேறியது நாமலின் தந்தையா என்ற கேள்வி பலரால் எழுப்பப்பட்டிருப்பதை factseeker அவதானித்தது.
இது குறித்து தந்தி TVயின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடிப்பார்த்ததில், அவர்களது ட்விட்டரில் “சித்தப்பா கோத்தபய ராஜபக்சே வெளியேறியது தவறு” என்ற விளம்பரப் பதிவையே அவதானிக்க முடிந்தது.
எனினும், தந்தி TV முதலில் பதிவிட்டிருந்த பதிவில் “அப்பா நாட்டை விட்டு வெளியேறியது தவறு” என காணப்பட்ட நிலையில் அதனை நீக்கிவிட்டு “சித்தப்பா கோத்தபய ராஜபக்சே வெளியேறியது தவறு” என திருத்தி எழுதப்பட்ட பதிவே தற்போது உள்ளது.
எனினும் “அப்பா நாட்டை விட்டு வெளியேறியது தவறு” என எழுதப்பட்ட பதிவினையே சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவு தவறானது என்பது factseeker சுட்டிக்காட்டுகின்றது.
மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது அப்போதைய ஜனாதிபதியாக இருந்தவர் கோட்டாபய ராஜபக் ஷ என்பதுடன், அவர் நாமல் ராஜபக் ஷவின் சித்தப்பா என்பதும் குறிப்பிடத்தக்கது.
தந்தி TVக்கு நாமல் ராஜபக் ஷ வழங்கிய நேர்காணல் முழுமையாக இங்கே இணைக்கப்பட்டுள்ளது.