அமைச்சர் அலி சப்ரியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக 5 கோடி ரூபாய் செலவானது உண்மையா ?
வெளிவிவகாரத்துறை அமைச்சராக அலி சப்ரி கடந்த 2022.07.22ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட நிலையில், இந்த ஏழு வெளிநாட்டு விஜயங்களும் அலி சப்ரி வெளிவிவகாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் ஏழு மாத காலப்பகுதிக்குள்ளேயே இடம்பெற்றுள்ளன.
by Anonymous |
ஜூன் 21, 2023
வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரியின் ஏழு உத்தியோகபூர்வ வெளிநாட்டுப்பயணங்களுக்காக சுமார் 5 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் செலவிடப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாகப் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக்கொண்டு ஊடகவியலாளர் ஒருவரால் எழுதப்பட்டிருந்த செய்தியை மேற்கோள்காட்டி இப்பதிவைச் செய்திருந்தார்.
எனினும் அந்த ஊடகவியலாளரின் டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் முற்றிலும் பொய்யானது என்றும், தவறாக வழிநடத்தும் வகையில் அந்தத் தகவல் அமைந்திருப்பதாகவும் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையானது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடர், இரண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடர்கள், இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் கூட்டம் மற்றும் ‘ஆசியான்’ பிராந்திய மாநாடு ஆகியவற்றுக்கான 5 பிரதிநிதிகள் குழு மற்றும் அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டு இருதரப்பு விஜயங்கள் என்பவற்றுக்கான மொத்த செலவினமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து factseeker இடம் தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, இந்தப் பிரதிநிதிகள் குழுவுக்குத் தான் தலைமைதாங்கிய போதிலும், மேலதிகமாக 22 அதிகாரிகள் அதில் கலந்துகொண்டதாகவும், தனது தனிப்பட்ட செலவீனமாக இது சித்தரிக்கப்படுவது தவறானது எனவும் அவர் விளக்கமளித்தார்.
மேலும் இந்த உயர்மட்டக்கூட்டங்களில் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளவேண்டியிருந்ததாகவும், அதன்மூலம் குறுகிய , நடுத்தரகால மற்றும் நீண்டகால நன்மைகள் கிடைக்கப்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வெளிவிவகாரத்துறை அமைச்சும் இது குறித்து அறிக்கை ஒன்றினை விடுத்து தமது பக்க நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாகப் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக்கொண்டு ஊடகவியலாளர் ரிப்தி அலியினால் எழுதப்பட்டிருந்த முழுமையான செய்தியில் அமைச்சர் பயணம் மேற்கொண்ட நாடுகள், அப்பயணத்துக்கான காரணம், அமைச்சருடன் பயணித்த நபர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பயணங்களுக்கும் ஏற்பட்ட செலவு என்பன உள்ளடங்கலாக அவசியமான அனைத்து விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வெளிவிவகாரத்துறை அமைச்சராக அலி சப்ரி கடந்த 2022.07.22ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட நிலையில், இந்த ஏழு வெளிநாட்டு விஜயங்களும் அலி சப்ரி வெளிவிவகாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் ஏழு மாத காலப்பகுதிக்குள்ளேயே இடம்பெற்றுள்ளன.
குறித்த தினத்திலிருந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் கம்போடியா, சுவிட்ஸர்லாந்து, அமெரிக்கா, பங்களாதேஷ் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்துள்ளார். இதன்போது அமைச்சருடன் ஒவ்வொரு விஜயங்களுக்கும் அதிகாரிகளும் சென்றுள்ளதுடன் அவ்வாறு மொத்தமாக 22 அதிகாரிகள் பங்கு பற்றியுள்ளதாகவும் வெளிவிவகாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில், சுவிட்ஸர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இரண்டு தடவைகள் இவர் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமல்லாமல், செப்டம்பர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் தலா இரண்டு வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளார். இந்த ஏழு வெளிநாட்டு விஜயங்களுக்காக 5 கோடி 19 இலட்சத்து 47 ஆயிரத்து 732 ரூபாய் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் செலவளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் அதிகளவிலான தொகையாக ஒரு கோடியே 45 இலட்சத்து 21 ஆயிரத்து 892 ரூபாய், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தில் பங்கேற்க ஆறு பேரைக் கொண்ட தூதுக்குழுவினருடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜெனீவா சென்ற போது செலவளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் விண்ணப்பத்திற்கு கடந்த மே 16ஆம் திகதியே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் தகவல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.