அநுரகுமார தெரிவித்ததாக போலிச்செய்தி பகிரப்படுகின்றது
உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாது அநுரகுமாரவின் கருத்து தமிழ் ஊடகங்களின் பரவலாக பகிரப்பட்டுள்ளன.
by Anonymous |
பிப்ரவரி 25, 2024
தமிழர்களுக்கு எதிரான போருக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக தெரிவித்ததாக இம்மாதம் 21ஆம் திகதி தினக்குரல் பத்திரிகையில் செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு factseekerஇற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆகவே இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், குறித்த செய்தியின் மூலமானது ‘ஒருவன்’ இணையதளத்தில் இருந்து பெறப்பட்டுள்ளதை factseekerஇனால் உறுதிப்படுத்த முடிந்தது.
எனினும் இந்த செய்தியை ‘ஒருவன்’ இணையதளம் முதலில் “தமிழர்களுக்கு எதிரான போருக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியது” என்ற தலைப்பில் பிரசுரித்திருந்த போதிலும் பின்னர் அச்செய்தியின் தலைப்பை மாற்றியுள்ளது.
தற்போது அந்த செய்தியின் தலைப்பானது “2005 தேர்தலில் மஹிந்தவை ஆதரித்த ஜே.வி.பி: அனுரகுமார எம்.பி வெளிப்படுத்திய தகவல்” என காணப்படுகின்றது.
எனினும் தினக்குரல் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட செய்தியே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாவிடம் factseeker வினவியபோது, தலைவர் அநுரகுமாரவினால் அவ்வாறான கருத்துக்கள் பகிரப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார். அத்துடன் இது குறித்து தேசிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு மறுப்பு அறிவித்தல் ஒன்றையும் விடுத்துள்ளது.
ஆகவே அநுரகுமார கூறியதாக பகிரப்படும் செய்தி போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.