அதிகாரத்தை கைப்பற்றாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனாதிபதி நிதி வழங்காமல் இருக்க முடியுமா?

பெரும்பாலான உள்ளூராட்சிசபைகள் அரசியலமைப்பு ரீதியாக பரவலாக்கப்பட்டுள்ளன என்பதுடன், மத்திய அரசின் ஒதுக்கீடுகளைத் தவிர, அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பராமரிக்க போதுமான வருவாய் ஆதாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன
by Anonymous |
மே 6, 2025

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைமையிலான அரசாங்கம் வெற்றிபெறாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்குவது குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப்படாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரச்சார மேடைகளில் கூறிய கருத்துக்கள் கடுமையான விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டன. எனினும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதியை ஜனாதிபதி உண்மையிலேயே நிறுத்தி வைக்க முடியுமா? மத்திய அரசின் நிதி இல்லாமல் உள்ளூராட்சி மன்றங்களை நடத்துவது சாத்தியமா? என்ற விடயங்கள் தொடர்பில் FactSeeker ஆராய்ந்து பார்த்தது.
கடந்த 12.04.2025 அன்று கந்தளாயில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் பங்கேற்றபோது ஜனாதிபதி பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்.
“நாங்கள் மீண்டும் நவம்பர் மாதம் ஒரு வரவுசெலவு திட்டத்தை கொண்டு வருவோம். ஜூன் மாதத்திற்குள் அதற்கான திட்டங்களை வரைவோம்.அதற்கமைய பிரதேச சபைகளுக்கான அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுப்போம். கந்தளாய் பிரதேச சபையின் வேலைத்திட்டம் மற்றும் நிதி என்பவற்றை பார்ப்போமானால், மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடவேண்டும், நாம் அதற்கான நிதியை வழங்குகின்றோம். உதாரணமாக :- நாங்கள் இந்த திட்டத்தை எடுத்துக்கொள்வோம்.அந்த திட்டத்தை அவதானிப்போம், அந்த திட்டம் கந்தளாய் பிரதேச சபையிலிருந்து வந்தது என்றால், அடுத்ததாக அதனை அனுப்பியது யார் என்றே பார்ப்போம். கந்தளாய் பிரதேச சபை தேசிய மக்கள் சக்தியின் கையில் இருப்பதால், அவர்கள் கண்களை மூடிக்கொண்டு இந்த முன்மொழிவை அங்கீகரித்து பணத்தை வழங்குவார்கள்.இல்லை என்றால், உள்ளூராட்சி சபை வேறு அணியினர் கைகளுக்கு சென்றுவிட்டது என்றால், அவர்கள்தான் அதை அனுப்பினார்கள் என்றால் ஒன்றுக்கு பத்துத் தடவைகள் அதனை பரிசீலிப்போம். முந்தைய குழு எப்படி செயற்பட்டது என்று பார்த்துள்ளோம். அபிவிருத்திக்கு சிறிது பணம் ஏனையவை எல்லாம் பைகளுக்கு போய்விடும், அப்படியானால்,பிரதேச சபைக்கு பணம் கொடுக்க மாட்டோம். திருட பணம் கொடுக்க வேண்டுமா? இந்த அனைத்து பிரதேச சபைகளிலும் அதிகாரம் வழங்கப்பட வேண்டியது தேசிய மக்கள் சக்திக்கே. இல்லையென்றால் அது பயனற்றது.மத்திய அரசு செய்து வரும் பணிகளை பிரதேச சபைகள் இழுத்தடிக்கும் என்றால் அது சரிப்பட்டு வராது.” என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
திஸ்ஸமஹாராம, புத்தளம், கண்டி, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்புகளிலும் ஜனாதிபதி இதே கருத்தை வெளியிட்டிருந்தார். பிரதமர் ஹரிணி அமரசூரியவும் பொதுக் கூட்டங்களில் இதுபோன்ற கருத்துக்களை வெளிப்படுத்துவதையும் அவதானிக்க முடிந்தது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ளபடி, மத்திய அரசு வழங்கும் சலுகைகளை எந்த வகையிலும் கட்டுப்படுத்தவோ/தடுக்கவோ அல்லது நிறுத்தி வைக்கவோ நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ அதிகாரம் உள்ளதா?
பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள் போன்ற மாகாண நிறுவனங்களுக்கான நிதி ஆதாரங்களை factseeker ஆராய்ந்தபோது பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள் போன்ற மன்றங்களை உள்ளடக்கிய உள்ளூராட்சி சபைகள், மூன்று சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறன என்பதை அவதானிக்க முடிந்தது.
1. 1947 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1865 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாநகர சபைகள் கட்டளைச் சட்டம்
2. 1937 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க நகரசபை கட்டளைச் சட்டம்
3. 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டம்
மாநகர சபைகள்
மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் பகுதி IX, “மாநகர சபைகளுக்கான நிதி” பற்றிக் கையாள்கிறது மற்றும் பிரிவு 185, “மாநகர சபைகளுக்கான நிதி மற்றும் அதன் அமைப்பு” பற்றிய தகவல்களை வழங்குகிறது. அதன்படி,
I. மதிப்பீட்டு வரிகள், தீர்வைகள், கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள்
II. மாநகர சபை அபராதங்கள், பிற அபராதங்கள்
III. முத்திரை வரி
IV. விற்பனை, குத்தகைகள் அல்லது பிற பரிவர்த்தனைகளிலிருந்து பெறப்பட்ட பணம்
V. சொத்து அல்லது சேவைகளிலிருந்து வருமானம்
VI. பாராளுமன்றத்தால் ஒதுக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட பணம் மற்றும் வருவாய் ஆதாரங்கள்
VII. அமைச்சரால் ஒதுக்கப்பட்ட கொடுப்பனவுகள்
VIII. கவுன்சிலின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளிலிருந்து எழும் பணம் மாநகர சபைகள் நிதி இதிலிருந்து நிதியளிக்கப்படுகிறது.
நகரசபை
நகரசபை கட்டளைச் சட்டத்தின் பகுதி VII “பணம்” என்பதைக் குறிக்கிறது மற்றும் பிரிவு 158 “உள்ளூர் நிதி மற்றும் அதன் அமைப்பு” பற்றிய தகவல்களை வழங்குகிறது. அதன்படி,
I. அபராதம்
II. முத்திரை வரி
III. அமைச்சரால் ஒதுக்கப்பட்ட கொடுப்பனவுகள்
IV. மதிப்பீட்டு வரிகள், தீர்வைகள், கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள்
V. விற்பனை, குத்தகைகள் மற்றும் பரிவர்த்தனைகளிலிருந்து கிடைக்கும் வருமானம்
VI. சபைகளுக்கான சொத்து அல்லது பொது சேவையின் செயல்பாட்டிலிருந்து பெறப்பட்ட வருமானம்.
VII. பிற ஒதுக்கப்பட்ட வருமான ஆதாரங்களிலிருந்து பணம்
VIII. பாராளுமன்றத்தால் ஒதுக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட பணம் மற்றும் வருவாய் ஆதாரங்கள்
IX. நகரசபையின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளிலிருந்து எழும் பணம் பிராந்திய நிதி இதிலிருந்து நிதியளிக்கப்படுகிறது.
பிரதேச சபைகள்
பிரதேச சபைச் சட்டத்தின் பகுதி V “பணம்” என்பதைக் குறிக்கிறது மற்றும் பிரிவு 129 “பிரதேச சபை நிதி” பற்றிய தகவல்களை வழங்குகிறது. அதன்படி,
I. அபராதம்
II. முத்திரை வரி
III. அமைச்சர் வழங்கிய மானியங்கள்
IV. மதிப்பீட்டு வரிகள், சுங்க வரிகள் மற்றும் பிற கட்டணங்கள்
V. விற்பனை, குத்தகைகள் மற்றும் பரிவர்த்தனைகளிலிருந்து கிடைக்கும் வருமானம்
VI. மன்றத்தின் சொத்திலிருந்து அல்லது பொது சேவை வழங்கலில் இருந்து பெறப்பட்ட பணம்.
VII. பிரதேச சபைக்கு சட்டப்பூர்வமாகக் கிடைக்கும் வருமான ஆதாரங்கள்
VIII. பாராளுமன்றத்தால் ஒதுக்கப்படும் பணம் மற்றும் வருவாய்
IX. கடன் வாங்கிய பணம்
X. பிற மூலங்களிலிருந்து பெறப்பட்ட பணம்
பிரதேச சபை நிதி இதிலிருந்து நிதியளிக்கப்படுகிறது.
இலங்கை உள்ளூராட்சி சபை நிறுவனங்களின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின்படி, உள்ளூராட்சி விவகாரங்கள் மாகாண சபைகளுக்கு மாற்றப்பட்டன. அதன்படி, உள்ளூராட்சி மன்ற விவகாரங்களின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை மத்திய அரசிடமிருந்து மாகாண சபைகளுக்கு மாற்றப்பட்டன. இருப்பினும், உள்ளூராட்சி சபைகளின் தேசிய கொள்கை, உள்ளூராட்சி சபைகளின் அமைப்பு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் வடிவம் ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளது.
உள்ளூராட்சி நிறுவனங்களைக் கலைக்கவும், உள்ளூராட்சி நிறுவனங்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிடவும் மாகாண சபைக்கு அதிகாரம் உள்ளது. ஒரு மாகாண சபைக்கு, உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறிக்க முடியாது. தேவைப்பட்டால் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படலாம்.
அதன்படி, நிதிக் கட்டுப்பாடு தொடர்பாக உள்ளாட்சி நிறுவனங்களுக்குப் பரவலாக்கப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது சட்டப் பரிசோதனையிலிருந்து தெளிவாகிறது.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்ட மஹரகம நகரசபையின் முன்னாள் உறுப்பினர் தனுஷ்க ராமநாயக்க, சட்டப்படி உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி அதிகாரங்களின்படி, அந்த நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு தவிர வேறு பல ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்தார்.
உள்ளாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்காக மத்திய அரசின் ஒருங்கிணைந்த நிதியில் இருந்தே நிதி ஒதுக்கப்படுகிறது. நிதி ஆணையத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு இந்த நிதி விநியோகிக்கப்படுகிறது.
இருப்பினும், நகரசபையில் சேவை செய்ய நிரந்தர ஊழியர்கள் போதுமானதாக இல்லாதபோது, ஒப்பந்த மற்றும் தற்காலிக அடிப்படையில் பணியாளர்களை பணியமர்த்துவதற்கான அதிகாரம் நகராட்சி மன்றங்களுக்கு உள்ளன. அவர்களின் சம்பளம் நகர சபை நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டும். ஒரு நகரசபை ஒரு நபரின் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சேவைகளை வழங்க முடியும் என்றும், அவற்றில் எதற்கும் மத்திய அரசின் நிதி தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு மாநகர சபைக்கு தீயணைப்பு இயந்திரம் இருக்க வேண்டும். அந்த அலகு ஒரு தீயணைப்பு இயந்திரத்தை வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அது வெளிநாட்டு நிதிக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கலாம் அல்லது மத்திய அரசின் உதவியை மத்திய அமைச்சகம் மூலம் பெற வேண்டியிருக்கலாம், ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட, அரசாங்கம் அத்தகைய நிதியை வெளியிடாமல் இருப்பது நடைமுறைக்கு மாறானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், உள்ளாட்சி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும் முறையையும் அவர் சுட்டிக்காட்டினார். அதில்,
ஜனாதிபதி விரும்பினால்,பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி ஜனாதிபதி செலவினத் தலைப்பிலிருந்து நிதி ஒதுக்கப்படலாம். பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பரவலாக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதியை பிரதேச வளர்ச்சிக்குச் செலுத்தலாம்.ஆனால் இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி எதையும் நேரடியாக நகரசபைகளுக்கு அனுப்ப முடியாது.
அத்தகைய சந்தர்ப்பத்தில், திறைசேரியில் இருந்து பணம் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு மாற்றப்படும்,மேலும் அந்தப்பணம் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலகம் மூலம் பிரதேச செயலகத்திற்கு மாற்றப்படும்.இதன்போது திருப்பிச் செலுத்துதல்கள் பெரும்பாலும் நிகழ்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். விரும்பினால், திட்டத்தை செயல்படுத்துவதற்கு தொடர்புடைய உள்ளூராட்சி நிறுவனத்தை ஒப்பந்ததாரராக நியமிக்கும் திறன் பிரதேச செயலகத்திற்கு உள்ளது.
கடினமான பகுதிகளில் அமைந்துள்ள அல்லது குறைந்த வருமானம் கொண்ட ஒரு சில உள்ளூராட்சி சபைகளைத் தவிர, பெரும்பாலான மன்றங்கள் தங்கள் அதிகார வரம்பிற்குள் உள்ள செயல்பாடுகளுக்கு போதுமான வருமான ஆதாரங்களைக் கொண்டுள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கொழும்பு மாநகர சபையால் வெளியிடப்பட்ட 2023 ஆண்டு வருமானம் மற்றும் செலவு அறிக்கையை நாங்கள் விசாரித்தபோது, திறைசேரியினால் கொழும்பு மாநகர சபைக்கு 3,417,229,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது, அதில் ஊழியர் சம்பளத்திற்காக 3,375,867,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
அதன்படி, பெரும்பாலான உள்ளூராட்சிசபைகள் அரசியலமைப்பு ரீதியாக பரவலாக்கப்பட்டுள்ளன என்பதையும், மத்திய அரசின் ஒதுக்கீடுகளைத் தவிர, அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பராமரிக்க போதுமான வருவாய் ஆதாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.