அச்சுறுத்தலாக அமையும் AI : போலிச் செய்திகளின் எழுச்சி ‘தவறான தகவல் பரப்புரையை’ உருவாக்குகிறது

AI இன் படங்களை, காணொளிகளை மற்றும் குரல் பதிவுகளை உருவாக்கும் திறன் அதிக உச்சத்தை தொட்டுள்ளது. அதி உயர்ந்த தரத்திலான புகைப்படங்களை தயாரிக்கின்றது. இது கூர்மையான கண்களைக் கூட முட்டாளாக்கும் என்பதே உண்மையாகும்.
by Anonymous |
ஏப்ரல் 26, 2024

நாம் பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் செல்லப்பிராணிகளின் புகைப்படங்களுடனும் மீம்ஸ்களுடனும் இருந்தபோது வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாகவும் எளிமையாகவும் இருந்தது. இருப்பினும் சமீபத்திய காலங்களில், நமது சமூக வலைதளங்கள் மிகவும் வித்தியாசமாகவும், ஆபத்து மிக்கதாகவும் மாறிக்கொண்டுள்ளதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
உண்மையென நம்பக்கூடிய அளவுக்கு போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்களையும், காணொளிகளையும் நாம் சமூக ஊடகங்களில் பார்க்கின்றோம். இது குறித்து உங்களுக்கு எந்தவித தெளிவும் இல்லாத பட்சத்தில் அல்லது போலியென சொல்லப்படாவிட்டால் அவை உண்மையானவையென நீங்கள் நம்பிவிடுவீர்கள்.
செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் (Artificial intelligence) அல்லது (AI), என்பதானது மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் படைப்பாக்கத்திறன் வேறுபாட்டை காண்பிக்கின்றது. இந்த படைப்பாக்கத்திறனானது, மனிதனின் நுண்ணறிவுக்கு அப்பால் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது.
AIயின் ஆதிக்கம் ஆரோக்கியமான விதத்தில் பங்களிப்பை செலுத்தும் அதேவேளையில் மறுபுறம் போலிச் செய்திகளை உருவாக்குவதை நோக்கமாகவும் கொண்டுள்ளது. தேர்தல்கள், போர்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் பற்றிய தவறான தகவல்களைப் பரப்புவதுடன், உண்மைக் கட்டுரைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் இவை ஆதிக்கம் செலுத்துகின்றன.
கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து, AIயினால் உருவாக்கப்பட்ட தவறான கட்டுரைகளை பிரசுரிக்கும் இணையதளங்கள் 1,000 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகவும், இதுவரை AI மூலமாக உருவாக்கப்பட்ட 802 செய்திகள் மற்றும் செய்தித் தளங்கள் மனித மேற்பார்வையின்றி செயல்படுவதைக் கண்டறிந்துள்ளதாகவும், தவறான தகவல்களைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பான NewsGuard தெரிவித்துள்ளது.
AI தொழிநுட்பம் மூலமாக போலியாக உருவாக்கப்படும் புகைப்படங்கள்,காணொளிகள் சமூகத்தில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதுடன், தவறான வழிநடத்தல்களையும் முன்னெடுக்கின்றன. உலக பிரபலங்களின் புகைப்படங்களை AI தொழிநுட்பத்தின் உதவியுடன் போலியாக உருவாக்கி அதன் மூலமாக பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கும் பதிவுகளை அளவுக்கு அதிகமாக அவதானிக்க முடிகின்றது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் factseeker இது குறித்து தொடர்ச்சியாக சகலரையும் அறிவுறுத்தி வருகின்ற நிலையில், அண்மைக்காலங்களில் AI தொழிநுட்பத்தின் உதவியுடன் போலியாக உருவாக்கப்பட்டு பகிரப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை இங்கே காட்சிப்படுத்துகின்றது,
1.
சீன ஜனாதிபதி சீ சின்பிங் LGBTQ பேரணியொன்றில் கலந்துகொண்டதாக பகிரப்படும் புகைப்படம் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. எனினும் இது முற்றுமுழுதாக AIதொழிநுட்பதின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட போலியாக புகைப்படமாகும்.
2.
இஸ்ரேல்- ஈரான் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது ஈரான் ஆளில்லா ஏவுகளைகளை இஸ்ரேல் மீது ஏவியதாக தெரிவித்து ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களின் பகிரப்பட்டது. எனினும் இந்த புகைப்படமும் AI மூலம் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும்.
3.
“பஃபர் ஜெக்கெட் (puffer jacket) அணிந்த போப்பின் உருவம்” என்ற தலைப்புடன், பஃபர் ஜெக்கெட் அணிந்திருக்கும் பாப்பரசரின் இந்த AI புகைப்படம் இந்த ஆண்டு இதுவரை அதிகளவானோரால் பகிரப்பட்ட AI புகைப்படமாக அறியப்படுகின்றது. இந்த புகைப்படம் மில்லியன் தடவைகள் மக்களால் பார்க்கப்பட்டுள்ளதுடன், நூறாயிரக்கணக்கான தடவைகள் சமூல வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்தப்புகைப்படம் மக்களை எவ்வளவுதூரம் நம்ப வைக்கிறது என்பதுதான் இங்கே மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது.
4.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்த நிலையில், டிரம்ப் கைது செய்யப்பட்டால் எப்படி இருக்கும் என்றவாறான தலைப்புடன் இவ்வாறான ஒரு புகைப்படம் உருவாக்கப்பட்டது. இந்தப் புகைப்படம் 6.7 மில்லியன் தடவைகள் பொதுமக்களால் சமூக வலைதளங்களில் பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
5.
உலகின் புகழ்பெற்ற நகரமான பாரிஸ், குப்பைகளால் மூடப்பட்டிருப்பதாக ஒரு புகைப்படம் சமூல வலைதளங்களில் பகிரப்பட்டது. அந்நாட்டில் கழிவகற்றும் தொழிலாளர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அந்நாட்டில் குப்பைகள் அகற்றம் செயற்பாடுகளில் சிரமங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் இந்த புகைப்படம் AI தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டதாகும்.
6.
அமெரிக்காவின் பென்டகன் கட்டடத்துக்கு அருகே குண்டு வெடித்ததாக கூறி ஒரு புகைப்படம் எக்ஸ் தளத்தில் அதிகளவில் பகிரப்பட்டது. இது உடனடியாக அந்நாட்டில் பல குழப்பங்களை ஏற்படுத்த காரணமாக அமைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தன. எனினும் இப் புகைப்படமானது AI தொழிநுட்பம் மூலமாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும் என்பதையும் கண்டறிந்து இதுவொரு போலிச் செய்தியென உறுதிப்படுத்தப்பட்டது.
7.
எலோன் மஸ்க் தனது ஜெனரல் மோட்டார்ஸ் போட்டியாளரான மேரி பார்ராவுடன் கைகளை கோர்த்து நடப்பது போன்ற புகைப்படம் ஒன்று வைரலாக பரவியது. பிரையன் லோவெட் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த புகைப்படம், இரண்டு போட்டித் தலைமை நிர்வாக அதிகாரிகளும் கைகோர்த்து நடப்பதைப்போன்று வெளிப்படுத்தியது. எனினும் இந்த புகைப்படம் AI தொழிநுட்பம் மூலமாக உருவாக்கப்பட்டது என்பதை மஸ்க் உற்பட பலர் தெரிவித்திருந்ததுடன், எலோன் மஸ்க் இந்த புகைப்படத்தை நகைச்சுவையுடன் எடுத்துக்கொண்டு, “நான் அந்த ஆடையை அணிய மாட்டேன்” என்றும் பதிலளித்திருந்தார்.
8.
அனுஷ்கா ஷர்மாவும் விராட் கோலியும் தங்களின் இரண்டாவது குழந்தை குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்டனர். இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, இருவரதும் ரசிகர்கள், நலன் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்து செய்திகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலியின் இரண்டாவது குழந்தையென AI மூலமாக உருவாக்கிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
AI மக்களிடையே பொழுதுபோக்கையும், சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ள அதே வேளையில், போலிச்செய்திகள் அதிகளவில் பரப்பப்படவும் ஏதுவாக அமைந்துள்ளது. ஆகவே இவ்வாறான சூழ்நிலைகளில் AI மூலமாக உருவாக்கப்பட்ட படங்களையும், உண்மையான படங்களையும் எவ்வாறு வேறுபடுத்தி அறிந்துகொள்வது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
AI மூலமாக உருவாக்கப்பட்ட படங்களையும், உண்மையான படங்களையும் எவ்வாறு வேறுபடுத்தி அறிந்துகொள்வது
AI மூலமாக உருவாக்கப்பட்ட படங்களுக்கும் உண்மையான படங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது எளிமையானது. மங்கலான விபரங்கள் ( Blurry details)அல்லது கைகள் மற்றும் கால்களின் வழக்கத்திற்கு மாறான வழங்கல்கள் (Unusual renderings )சொல்லக்கூடிய அறிகுறிகளை நீங்கள் அவதானிக்க வேண்டும்.
ஆனால் AI தொழிநுட்பம் மேலும் நேர்த்தியாக்கப்பட்டு வருகிறது. அத்துடன் AI புகைப்படங்களில் இந்த தடயங்கள் குறைவாகவே வெளிப்படுகின்றன. AI மூலமாக உருவாக்கப்பட்ட படங்களைக் கண்டறிய, நீங்கள் சற்று ஆழமாக அவதானிக்க வேண்டும். இதற்காக SIFT முறையைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அவ்வாறு போலியான புகைப்படங்களை கண்டறிய முடியும்.
S.I.F.T
- நிறுத்து (Stop) : நீங்கள் அவதானிக்கும் படத்தை உண்மையென ஏற்றுக்கொள்வதற்கு முன், சிறிது நேரம் நிறுத்தி, விமர்சன ரீதியாக மதிப்பிடவும்.
- புலனாய்வு (Investigate) : படத்தின் விபரங்களை ஆராய்ந்து, ஏதேனும் முரண்பாடுகள் அல்லது அசாதாரண கூறுகளைத் தேடுவதன் மூலம் படத்தின் உண்மைத்தன்மையை கண்டறிய முடியும்.
- சிறந்த மூலங்களை கண்டறிதல் (Find better coverage) : படத்தின் தோற்றம் மற்றும் நம்பகத்தன்மை பற்றிய கூடுதல் தரவுகளை வழங்கக்கூடிய ஆதாரங்கள் அல்லது பிரத்தியேக மூலங்களை கண்டறிதல்.
- உண்மையான உள்ளடக்கத்தை கண்டறிதல் (Trace the original context) : படத்தின் சட்டப்பூர்வ தன்மையை சரிபார்க்கவும் தவறான தகவல் பரவுவதைத் தடுக்கவும் அதன் உண்மையான உள்ளடக்கத்தை கண்டறிதல் வேண்டும்.
இவ்வாறு அவதானிப்பதன் மூலமாக போலியிலிருந்து உண்மையானதை வரிசைப்படுத்த உதவுவதுடன் போலிச் செய்திகளிலிருந்து உங்களைத் தெளிவுபடுத்தவும் உதவுகிறது. எனினும் இவ்வாறான முறைமைகளை நீங்கள் கையாள்வதன் மூலமாக உண்மைகளை கண்டறிய முடியும் என்றாலும், தற்போது செயற்கை நுண்ணறிவு கருவிகளின் அதி உச்ச செயல்திறன் ஒரு படத்தை உருவாக்கும் AI கருவிகளால் உருவாக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய கடினமாகி வருகிறது. ChatGPT அல்லது Midjourney போன்ற கருவிகள் மூலமாக எளிதில் போலியான படங்களை உருவாக்கலாம்.
எவ்வாறாயினும் கூகுள் (Google) , அடோப் (Adobe ) மற்றும் மைக்ரோசொப்ட் ஆகியவை AI உள்ளடக்க உருவாக்கங்களுக்கு போலி என்ற ஒப்புதல் அளிக்கின்றன. AI மூலமாக உருவாக்கப்பட்ட படங்களில் வெளிப்படுத்தல்களைச் சேர்க்க கூகுள் திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் அடோப் இன் உள்ளடக்க சான்றிதழ்கள் AI மூலமாக செய்யப்பட்ட திருத்தங்களைக் கண்காணிக்கவும் செயல்படுகிறது.
AI இன் படங்களை, காணொளிகளை மற்றும் குரல் பதிவுகளை உருவாக்கும் திறன் அதிக உச்சத்தை தொட்டுள்ளது. அதி உயர்ந்த தரத்திலான புகைப்படங்களை தயாரிக்கின்றது. இது கூர்மையான கண்களைக் கூட முட்டாளாக்கும் என்பதே உண்மையாகும். எவ்வாறாயினும் இதுபோன்ற தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நாம் பாராட்ட வேண்டிய அதே வேளையில், AI மூலமாக போலியான படைப்புகள் உருவாக்கம் மிகவும் சிக்கலானதும் அச்சுறுத்தலானதுமான பயணத்திற்கு அடித்தளம் இடுகின்றது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆக்கம் : ஆர்.யசி