Dilmah நிறுவனம் வசந்த சமரசிங்கவிற்கு வருடாந்த அனுசரணை தொகையை வழங்கியதா?

14 மே 2021 என்ற திகதியிடப்பட்டு பகிரப்படும் கடிதம் ஒரு மோசடி கடிதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
by Anonymous |
செப்டம்பர் 17, 2024

தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்கவின் பெயரில் Dilmah நிறுவனம் வருடாந்த அனுசரணை தொகையை வழங்கி வருவதாக கூறும் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
Dilmah நிறுவன உரிமையாளர் மெரில் ஜே. பெர்னாண்டோவின் கையொப்பதுடன் மே 14, 2021 என்ற திகதி இடப்பட்ட கடிதமே இவ்வாறு பகிரப்பட்டு வருகின்றது. அக்கடிதத்தில், வசந்த சமரசிங்க கோரியவாறு Dilmah நிறுவனம் 15 இலட்சம் ரூபாவை ‘வருடாந்திர அனுசரணை தொகையாக’ செலுத்தியுள்ள போதிலும் தேசிய தொழிற்சங்க நிலையத்தைச் சேர்ந்த ஒருவர் Dilmah நிறுவனத்தை பணத்திற்காக அச்சுறுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் சந்தேகத்திற்குரிய இக்கடிதம் தொடர்பில் factseeker ஆராய்ந்தது. இக்கடிதம் மற்றும் அதில் குறிப்பிட்டப்பட்டுள்ள தகவல் குறித்து பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதா என ஆராய்ந்த போதிலும் அவ்வாறான செய்திகளை எதுவும் வெளியிடவில்லை என்பதை அறியமுடிந்தது.
இது தொடர்பில் வசந்த சமரசிங்கவிடம் factseeker வினவிய போது, இது முற்றிலும் பொய்யானது என்றும் தேசிய மக்கள் சக்தியை சங்கடப்படுத்தும் நோக்கில் இவ்வாறான செய்திகள் பகிரப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.
மேலும், இது முற்றிலும் பொய்யானது என டில்மா நிறுவனத்தின் செயலாளர் ஜயங்க வெகொடபொலவின் கையொப்பத்துடன் வெளியிட்ட கடிதம் ஒன்றை காணக்கூடியதாக இருந்தது. அக் கடிதத்தில் 14 மே 2021 என்ற திகதியிடப்பட்டு பகிரப்படும் கடிதம் ஒரு மோசடி கடிதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்கவின் பெயரில் Dilmah நிறுவனம் வருடாந்த அனுசரணை வழங்கி வருவதாக கூறும் கடிதம் போலியான கடிதம் என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.