NPPயின் பிரச்சாரகர் மௌலவி முனீர் கூறியதாக பகிரப்படும் போலிச்செய்தி

'Short News' இணையதளத்தின் சின்னத்தையும் பெயரையும் பயன்படுத்தி போலியாக இவ்வாறான ஒரு செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது
by Anonymous |
ஆகஸ்ட் 30, 2024

“எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய ஒரு விடயமாக ஓரினச்சேர்க்கையை (LGBTQ ) அனுமதித்துள்ளோம். ஓரினச்சேர்க்கை இஸ்லாத்தில் ஹராம் என்று எங்கும் கூறப்படவில்லை. எமது கொள்கை பற்றி முஸ்லிம்கள் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்பில் அதன் பிரச்சாரகர் மௌலவி முனீர் கூறியதாக செய்தியொன்று ‘ Short News’ எனும் இணையதளத்தில் வெளியாகியுள்ளதாக வட்ஸ்-அப் குழுக்களில் செய்திகள் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
எனினும் இந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயுமாறு பலர் factseeker இடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இது குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இவ்வாறான ஒரு செய்தியை மௌலவி முனீர் தெரிவிக்கவில்லை எனவும், அதேபோல் ‘Short News’ எனும் இணையதளம் அவ்வாறான செய்தியொன்றை பிரசுரிக்கவில்லை என்பதையும் factseeker இனால் உறுதிப்படுத்த முடிந்தது.
‘Short News’ எனும் இணையதளத்தின் பணிப்பாளர் றஸ்மின் அவர்களை தொடர்புகொண்டு இது குறித்து வினவியபோது, தமது இணையதளத்தில் அவ்வாறான எந்தவொரு செய்தியும் பிரசுரமாகியிருக்கவில்லை எனவும், தமது இணையதளத்தின் சின்னத்தையும் பெயரையும் பயன்படுத்தி போலியாக இவ்வாறான ஒரு செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
அத்துடன், இது குறித்து ஒரு மறுப்புச்செய்தியையும் ‘Short News’ இணையதளம் பிரசுரித்துள்ளது.
LINK :https://www.shortnews.lk/2024/08/fake-news-npp-shortnews.html
அதேபோல், தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரச்சாரகர் மௌலவி முனீர் அவர்களிடம் இது குறித்து வினவியபோது, தான் எந்தவொரு ஊடகத்திற்கும் இவ்வாறான ஒரு செய்தியை வழங்கவில்லை எனவும், இவ்வாறு பகிரப்படும் கருத்தானது தனது நிலைப்பாடு அல்ல என்பதையும் தெரிவித்தார்.
ஆகவே வட்ஸ்-அப் குழுக்களில் பகிரப்படும் இந்த செய்தியானது உண்மைக்கு புறம்பானது என்பதுடன், போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.