ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிப்பு தாமதமாகுமா?
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் factseekerஇடம் உறுதிப்படுத்தினர்.
by Anonymous |
ஜூலை 25, 2024
2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிப்பு தாமதமாகும் என ‘மவ்பிம’ சிங்கள பத்திரிகையில் இன்று 25.07.2024 செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மேற்கோள்காட்டி வேறு சில இணையதளங்களிலும், ஊடகங்களிலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிப்பு தாமதமாகும் என்ற செய்தி பகிரப்படுகின்றதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
அதேபோல், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று 25.07.2024 பாராளுமன்றத்தில் உரையாற்றிய வேளையில், “ஜனாதிபதித் தேர்தல் திகதி குறித்து அடுத்தவாரமே அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளதாக செய்தியொன்று பகிரப்படுகின்றது, இவ்வாறான செய்திகளை பகிர்ந்து மக்களை குழப்பும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது” என்ற கருத்தினை முன்வைத்திருந்தார்.
எனினும், ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிப்பு தாமதமாகும் என்ற செய்தி பொய்யானது எனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் factseekerஇடம் உறுதிப்படுத்தினர்.
அதேபோல், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, 2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் திகதி நாளைய தினம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஆகவே பிரதான பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் பகிரப்படும் செய்தி தவறானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.