ரஞ்சன் ராமநாயகவின் பெயரில் போலி முகநூல் பதிவுகள்

போலிகளைக்கண்டு மக்கள் ஏமாறாதீர்கள்
by Anonymous |
ஜூலை 16, 2024

“உங்களின் பிறந்த மாதத்திற்கு ஏற்ப பரிசுகளை வெல்லும் வாய்ப்பு” என்ற பதிவொன்று 𝐑 ‘𝐫𝐚𝐦𝐧𝐚𝐲𝐚𝐤𝐞𝐞 மற்றும் Ranjan Ramanayake என்ற முகநூல் பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளதுடன், இப்பதிவினை பலர் தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து வருவதையும் இந்த பதிவில் பலரும் தமது பிறந்த மாதங்களை தெரிவித்து வருகின்றதையும் அவதானிக்க முடிகின்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவினால் இவ்வாறான உதவிகள் செய்துகொடுக்கப்படுவதாகவே குறித்த பதிவுகளில் தெரிவிக்கப்படுகின்றன. ஆகவே இதன் உண்மைத்தன்மை குறித்து Factseeker ஆராய்ந்து பார்த்ததில் இது ஒரு போலியான பதிவு என்பதையும், இது மக்களை ஏமாற்றும் செயற்பாடு என்பதையும் Factseeker இனால் கண்டறிய முடிந்தது.
போலியாக பகிரப்பட்டுவரும் அந்த பதிவில் இடப்பட்டுள்ள செய்தியானது :
“🎁உங்கள் பிறந்த மாதத்தை எழுதுங்கள், உங்கள் பிறந்த மாதத்திற்கு ஏற்ப பரிசு கிடைக்கும்.🎁
🎫ஜனவரி = ரூ.250,000💻
🎫பெப்ரவரி = ரூ.260,000💻
🎫மார்ச் = ரூ.250,000💻
🎫ஏப்ரல் = ரூ.290,000💻
🎫மே =ரூ.275,000💻
🎫ஜூன் = ரூ.255,000💻
🎫ஜூலை = ரூ.280,000💻
🎫ஒகஸ்ட் = ரூ.255,000💻
🎫செப்டெம்பர் = ரூ.270,000💻
🎫ஒக்டோபர் = ரூ.240,000💻
🎫நவம்பர் = ரூ.290,000💻
🎫டிசம்பர் = ரூ.265,000💻
இப்பரிசைப் பெற, இந்த பதிவை 10-15 முகநூல் குழுக்களில் பகிர வேண்டும், இப்போதே செய்யுங்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவின் புகைப்படங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டவை என்பதையும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவின் முகநூல் பக்கத்தில் அவர் இதனை பதிவேற்றியுள்ளார் என்பதையும் அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பில் factseeker முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் வினவியபோது, இதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார். கல்வி கற்கும் சிறுவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்படுவதாகவும், அவ்வாறு செய்யும் உதவிகளை முகப்புத்தகத்தில் பதிவேற்றும் போது அந்தப் புகைப்படங்களை பயன்படுத்தி ஒருசிலர் மோசடி செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பகிரப்பட்டுள்ள தனது புகைப்படங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் பதிவேற்றப்பட்டவை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், தனது பெயரை பயன்படுத்தி இவ்வாறான போலி பதிவுகள் அவ்வப்போது பகிரப்பட்டு வருவதாகவும், இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்த அவர், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு பொதுமக்களை ஏமாற்றும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மீண்டும் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும், அறிக்கை கோரவுள்ளதாகவும் அவர் factseeker இடம் தெரிவித்தார்.
ஆகவே, ரஞ்சன் ராமநாயகவின் பெயரில் முகநூல் பக்கத்தில் பகிரப்படும் இந்த பதிவானது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை Factseeker உறுதிப்படுத்துகிறது.