இலங்கை பொலிஸின் இலச்சினையுடன் பகிரப்படும் கடிதம் போலியானது
"தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான குற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கான மத்திய அலுவலகம்" எனும் பெயரிலான எந்த நிறுவக கட்டமைப்பும் தமது திணைக்களத்தின் கீழ் இல்லை என்கிறது இலங்கை பொலிஸ்.
by Anonymous |
ஜூலை 5, 2024
“தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான குற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கான மத்திய அலுவலகம்” (“CENTRAL OFFICE FOR THE FIGHT AGAINST CRIME RELATED TO INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY”) எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்றுக்கான அழைப்பு விடுப்பதை ஒத்ததாக கடந்த ஜூலை முதலாம் திகதி இடப்பட்ட கடிதம் ஒன்று சமூக வலைத்தலங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இலங்கை பொலிஸின் இலச்சினையுடன், மஞ்சள் நிற பின்னணி கொண்டதாக, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பெயரையும் இணைத்து, அவரால் வெளியிடப்பட்ட ஒரு கடிதமாக காண்பிக்கும் வண்ணம் இந்த கடிதம் ஆங்கில மொழியில் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்கள், சிறுவர் பாலியல் புகைப்படங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு, குறித்த கலந்துரையாடலில் பங்கேற்க தம்மை பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் குறித்த உண்மைத்தன்மையை ஆராயும் விதமாக, இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவியபோது, இக்கடிதம் தமது திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கடிதம் அல்ல எனவும், அவ்வாறு எந்த கலந்துரையாடலும் தமது திணைக்களத்தினாலோ அல்லது அதன் கீழுள்ள பிரிவுகளாலோ ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ factseeker இடம் தெரிவித்தார்.
இது குறித்து இலங்கை பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு :
Media on 2024.07.02 at 1320 සමාජ මාධ්ය ජාලාවල සංසරණය වන ව්යාජ ලිපිය සම්බන්ධව
அத்துடன், “தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான குற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கான மத்திய அலுவலகம்” எனும் பெயரிலான எந்த நிறுவக கட்டமைப்பும் தமது திணைக்களத்தின் கீழ் இல்லை எனவும், பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் இலச்சினை உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்தி போலியாக இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நிஹால் தல்துவ மேலும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இந்த போலிக் கடிதம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடிதத்தை தயாரித்தவர் மற்றும் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவரை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆகவே சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இந்த கடிதமானது போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.