எரிவாயு சிலிண்டர் காலாவதியாகுமா?
சர்வதேச தரநிலைகள் மற்றும் இலங்கையில் பின்பற்றப்படும் நடைமுறைகளை ஆராய்ந்த போது, சிலிண்டர் எரிவாயு காலாவதியாவதாக பகிரப்படும் தகவல்கள் உண்மையல்ல
by Anonymous |
ஜூன் 7, 2024
எரிவாயு சிலிண்டர் காலாவதியாகும் எனவும், அவ்வாறு காலாவதியாகும் எரிவாயுவை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும் பலர் சமூக வலைதளங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர். இதனை நம்பி பலர் கருத்துக்களையும் பதிவிட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இவ்வாறு பகிரப்படும் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது,
எரிவாயு சிலிண்டர் காலாவதியாகிவிட்டதா என்பதை எப்படி கண்டறிவது?
• சிலிண்டர் எரிவாயுவிற்கு காலாவதி திகதி உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
• காலாவதி திகதிக்கு அப்பால் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களினால் ஆபத்தை ஏற்படுத்தும். ஆகவே அவற்றை முகவரிடமே திருப்பி கொடுக்கப்பட வேண்டும்.
• உள்ளே இருக்கும் வாயுவை விட காலாவதி திகதியை புரிந்துகொள்வது முக்கியம்.
• நுகர்வோர் எரிவாயு சிலிண்டரை நிரப்புவதற்கு முன் அதன் காலாவதி திகதியை எப்போதும் சரிபார்க்க வேண்டும்.
• நுகர்வோர் காலாவதியான எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தக் கூடாது.
• நீங்கள் எரிவாயு சிலிண்டரை வாங்குவதற்கு முன், உற்பத்தி மற்றும் காலாவதி திகதியை எப்போதும் சரிபார்க்கவும்.
• காலாவதியான எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல, எனவே கவனமாக இருங்கள்.
• ஒவ்வொரு சிலிண்டருக்கும் அதன் தலைக்கு அருகில் 3 செங்குத்து தட்டுகள் (பக்க தண்டுகள்) உள்ளன. பக்கவாட்டு தகடுகளில் ஒன்றில் ஆல்பா எண் குறியீடு உள்ளது, அது தான் எரிவாயு.
சிலிண்டரின் காலாவதி திகதி
⛔ காலாவதி திகதியை அறிந்துகொள்வது எப்படி
⛔ எரிவாயு சிலிண்டரின் காலாவதி திகதி அகரவரிசையில் குறியிடப்பட்டுள்ளது, A B,C D, காலாண்டுகளில் கருதப்படும். அது மாதங்களில் காலாவதியாகும் முறைமையை அறிய உதவும். அதேபோல் ,எண் குறியீடு காலாவதியாகும் ஆண்டு என்பதைக் குறிக்கும்.
🅰️எழுத்து ஜனவரி முதல் மார்ச் வரை குறிக்கிறது.
🅱️ என்ற எழுத்து ஏப்ரல் முதல் ஜூன் வரை இருக்கும்.
🧡சி என்ற எழுத்து ஜூலை முதல் செப்டெம்பர் வரை.
🧡டி எழுத்து ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை.
எடுத்துக்காட்டாக, செங்குத்து தட்டு B-9 காலாவதி திகதியைக் கொண்டிருந்தால், எரிவாயு சிலிண்டர் ஜூன் 2009 இல் காலாவதியாகும் என்றும், C-16 என எழுதப்பட்டால், அது செப்டம்பர் 2016 இல் காலாவதியாகும் என்றும் அர்த்தம்.
⛔ எனவே, விபத்துகளைத் தவிர்க்க கவனமாக இருங்கள்..
இவ்வாறு அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் நிலைமை எவ்வாறு உள்ளது
இலங்கையில் தற்போது இரண்டு எரிவாயு விநியோக நிறுவனங்கள் உள்ள நிலையில், இது தொடர்பாக இவ்விரு நிறுவனங்களிடமும் வினவியபோது, எரிவாயு சிலிண்டரில் காலாவதி திகதி எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
இந்த சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளபடி எரிவாயு சிலிண்டரில் உள்ள திகதியானது அது பரிசோதனை செய்யப்பட்ட திகதி என்பதை குறிப்பதாகவும் மாறாக அது காலாவதி திகதி அல்ல என்றும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான சர்வதேச தர நிர்ணயம் குறித்து ஆராய்ந்து பார்த்தபோது, பின்வரும் விடயங்கள் புலப்பட்டன.
1. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவுக்கு (Liquefied Petroleum Gas – LPG) காலாவதி திகதி இல்லை. எரிவாயு சிலிண்டர்களை சோதனை செய்யப்பட்ட திகதி பதிவு செய்யப்படல் வேண்டும். மேலும், எரிவாயு அடுப்புடன் இணைக்கப்பட்ட பாகங்கள் (சீராக்கி, குழாய்) ஆகியவற்றுக்கு காலாவதி திகதி இருக்கலாம்.
2. கேஸ் சிலிண்டரின் மேல் அல்லது கீழ் பகுதியில், டிம்போல் இணைப்பில் ஆண்டு மற்றும் மாதத்தைக் குறிக்கும் சிறிய குறியீடு இருக்கும். இது மாதம் மற்றும் ஆண்டு ஆகியவற்றை (MM/YY) குறிக்கப்படும்.
3. மேலும், சிலிண்டருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஆய்வு மற்றும் பராமரிப்பு தேவைப்படலாம். பெரும்பாலும் பல ஆண்டுகளாக ஒரே சிலிண்டரைப் பயன்படுத்துதல் மற்றும் குழாய்களை பயன்படுத்துதல் தவறானது. அதற்கான காலாவதி திகதி உள்ளது.
4. எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அவற்றின் பாகங்களுக்கு சர்வதேச தரநிலைகள் மற்றும் ஆலோசனை திட்டங்கள் உள்ளன.
ISO தரநிலைகள்
1. ISO 22991:
இந்த தரநிலை எல்பிஜி எரிவாயு வர்க்கத்திற்கு பொருந்தும். இது எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி, பரிசோதனை மற்றும் பாதுகாப்பிற்கான பரிந்துரைகளை வழங்குகிறது.
2. ISO 4706:
இந்த தரநிலையானது எரிவாயு சிலிண்டர் உற்பத்தி மற்றும் சோதனைக்கான முக்கிய ISO தரநிலையாகும். சிலிண்டர் உற்பத்தி, சோதனை, பழுதுபார்ப்பு மற்றும் பாதுகாப்பு பயன்பாடுகளுக்கு இது பொருந்தும்.
சிலிண்டர் பழுதுபார்ப்பு, பராமரிப்பு மற்றும் மாற்றுதல் ஆகியவற்றிற்கு வகை மற்றும் மாதிரி தரநிலைகள் பின்பற்றப்பட வேண்டும். ரெகுலேட்டர்கள்,குழாய்கள் மற்றும் பிற துணைக்கருவிகளுக்கு குறிப்பிட்ட ஆய்வு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும். எரிவாயு சிலிண்டர்களை பரிசோதிக்கும் திகதி மற்றும் துணை சாதனங்களின் காலாவதி திகதிகள் (குழாய்கள், ரெகுலேட்டர்கள்) தெளிவாகக் குறிக்கப்பட வேண்டும்.
சிலிண்டர்களின் பரிசோதனை மற்றும் பராமரிப்பு என்பன ISO மற்றும் பிற சர்வதேச பாதுகாப்பு தரங்களுக்கு அமைய செய்யப்பட வேண்டும்.
சர்வதேச நிறுவனங்கள்
– UL (Underwriters Laboratories) என்பது பாதுகாப்பு மற்றும் தரநிலைகளை பரிசோதிக்கும் நிறுவனமாகும்.
– BSI (British Standards Institution): பிரித்தானிய தரநிலைகள் மற்றும் பாதுகாப்பில் அக்கறை கொண்ட ஒரு நிறுவனம்.
– CEN (European Committee for Standardization): ஐரோப்பாவில் தரநிலைகள் மற்றும் பாதுகாப்பிற்கான பரிந்துரை அமைப்பு.
இந்த தரநிலைகள் மற்றும் ஆலோசனை திட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம், எரிவாயு சிலிண்டர்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம், அவற்றின் ஆயுட்காலம் மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க முடியும்.
ஆதாரம் – https://cribb.in/find-lpg-gas-cylinder-expiry-test-date.htm
ஆகவே, சர்வதேச தரநிலைகள் மற்றும் இலங்கையில் பின்பற்றப்படும் நடைமுறைகளை ஆராய்ந்த போது, சிலிண்டர் எரிவாயு காலாவதியாவதாக பகிரப்படும் தகவல்கள் உண்மையல்ல என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.