வீடுகளுக்கு சென்று எயிட்ஸ் பரப்புவதாக வதந்தி பரவுகின்றது

அவ்வப்போது மக்களை எரிச்சலூட்டும் வகையில் இவ்வாறான பொய்யான செய்திகள் பகிரப்பட்டு வருவதால், இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் தெரிவித்துள்ளது
by Anonymous |
மே 27, 2024

“இதைக் கேட்டு மக்களுக்கு பகிருங்கள்…” என்று தெரிவிக்கும் குரல் பதிவொன்று அண்மைய நாட்களாக வட்ஸ்-அப் கணக்குகளில் பகிரப்பட்டு வருவதுடன், இந்தக் குரல் பதிவில் தெரிவிக்கப்படும் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயுமாறு factseeker இற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் பொதுமக்களுக்கு இலவசமாக இரத்தம் பரிசோதிக்கப்படுவதாக கூறி வீடுகளுக்கு வருவதாகவும், அவ்வாறு இரத்தத்தை பரிசோதிப்பதாக கூறி எயிட்ஸ் நோயினை பரப்புவதாகவும், ஆகவே இவ்வாறான நபர்களை வீடுகளுக்கு அனுமதிக்காது பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவித்தே இந்த குரல் பதிவு பகிரப்படுகின்றது. குறித்த குரல் பதிவை பலர் தமது வட்ஸ்-அப் கணக்குகளில் அதிகளவில் பகிர்ந்தும் வருகின்றனர்.
இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றுள்ளதா என சுகாதார அமைச்சிடம் factseeker வினவிய போது, இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெற்றதாக எவ்வித முறைப்பாடுகளும் தமக்குக் கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அதேபோன்று, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதா என பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் factseeker வினவியபோது, அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும், அவ்வப்போது மக்களை எரிச்சலூட்டும் வகையில் இவ்வாறான பொய்யான செய்திகள் பகிரப்பட்டு வருவதால், இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
எனவே, மக்களை அச்சமூட்டும் விதத்தில் பகிரப்படும் இந்தக் குரல் பதிவானது போலியான தகவல்களை உள்ளடக்கிய ஒன்றென்பதை factseeker உறுதி செய்கின்றது.