அரசியல் அழுத்தத்தின் கீழ் உலக ஊடக சுதந்திரம்
வருடாந்திர உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில் இலங்கை 150 ஆவது இடத்திலும், இந்தியா 159 ஆவது இடத்திலும் உள்ளன.
by Anonymous |
மே 3, 2024
உலகெங்கிலும் ஊடக சுதந்திரமானது அதற்கு உத்தரவாதமாக இருக்க வேண்டிய நபர்களாலேயே அச்சுறுத்தப்படுகின்றது. குறிப்பாக சிறப்புத் தேர்தல் ஆண்டாக கருதப்படும் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அரசியல் அழுத்தத்தின் கீழ் ஊடகங்கள் செயற்படவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு (Reporters Without Borders) மேற்கொண்ட, சமீபத்திய வருடாந்திர உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில் சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஊடகத்துறையை பாதுகாக்க ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர்
இன்றைய சூழ்நிலையில், ஊடகவியலாளர்களுக்கான சிறந்த சூழலுக்கான உத்தரவாதத்தை வழங்குவதற்கோ அல்லது நம்பகமான, சுதந்திரமான மற்றும் பொதுமக்களுக்கு உண்மைகளை தெரிவிக்கும், பொதுமக்களின் உரிமைகளை வலியுறுத்தும் ஊடகத்துறையின் பாதுகாப்பையும், இருப்பையும் உறுதிப்படுத்தும் தங்கள் பங்கை அரசாங்கங்கள் நிறைவேற்றவில்லை.
சர்வதேச அளவில், இந்த ஆண்டு ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் கொள்கைகளை, குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானம் 2222-ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சர்வதேச சமூகத்தின் தெளிவான அரசியல் விருப்பமின்மை காரணமாக ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள், அத்துமீறல்களை கட்டுப்படுத்த இயலாத நிலைமை உருவாகியுள்ளது.
காசாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போரின் விளைவாக, இதுவரை நூறுக்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2023 அக்டோபர் தொடக்கம் ஊடகங்களுக்கு எதிரான அத்துமீறல்கள் மிக மோசமாக இடம்பெற்று வருவதாக சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
உலகின் சிறந்த மற்றும் மோசமான ஊடக நிலை
2024ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திரக் குறியீடுகளுக்கு அமைய, நோர்வே, டென்மார்க் மற்றும் சுவிடன் ஆகிய நாடுகள் முறையை முதல் மூன்று இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அரசியல் குறிகாட்டியின் ஒட்டுமொத்த சரிவானது, உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில் இந்த நாடுகளையும் பாதித்துள்ளது .
ஊடக சுதந்திரத்தை உயரிய மட்டத்தில் கையாளும் நாடுகள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளாக உள்ள அதே வேளையில், 2024 உலக ஊடக சுதந்திர குறியீட்டில் மத்திய கிழக்கு பிராந்தியம் மிக மோசமான சூழ்நிலையை கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில், சர்வாதிகார அரசாங்கங்களின் அழுத்தங்களினால் ஊடகத்துறை மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது.
ஆப்பிரிக்க பிராந்தியத்தில் 10% க்கும் குறைவான நாடுகள் “மிகவும் தீவிரமான” சூழ்நிலையிலும், பாதிக்கும் அதிகமான நாடுகள் “கடினமான” சூழ்நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
அமெரிக்காவில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், ஊழல் அல்லது பழிவாங்கும் அச்சத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான விடயங்களைப் பற்றி செய்தியாளர்களால் விவாதிக்க இயலாமை பாரிய பிரச்சினையாக உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. குறிப்பாக உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்றான அமெரிக்காவின் ஊடக சுதந்தர தரப்படுத்தலில் முந்தைய நிலையில் இருந்து பத்து இடங்கள் சரிந்துள்ளது.
தென் அமெரிக்காவில் உள்ள கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும், ஊடக சுதந்திர நிலைமை இப்போது “சிக்கல் நிறைந்ததாக” உள்ளது. இந்த வலயத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் 37 பேர் கொல்லப்பட்ட நிலையில், மெக்சிகோ ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக பட்டியலிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், உலகின் இரண்டாவது கடினமான பிராந்தியமாக ஆசியா-பசிபிக் பிராந்தியம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஊடகப் பணியாளர்களுக்கு உலகின் மிகவும் ஆபத்தான பத்து நாடுகளில் ஐந்து நாடுகள் இந்த பிராந்தியத்தில் உள்ளன: இவற்றில் முறையே, மியான்மர் (171வது), சீனா (172வது), வட கொரியா (177வது), வியட்நாம் (174வது) மற்றும் ஆப்கானிஸ்தான் (178வது) இடங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பிராந்தியத்தில் இலங்கை 150 ஆவது இடத்திலும், இந்தியா 159 ஆவது இடத்திலும் உள்ளன.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில், கிட்டத்தட்ட பாதி நாடுகளில் நிலைமை “மிகவும் தீவிரமானது”. யேமன், சவுதி அரேபியா, ஈரான், பாலஸ்தீனம், ஈராக், பஹ்ரைன், சிரியா மற்றும் எகிப்து ஆகிய எட்டு நாடுகளுடன் ஐக்கிய அரபு இராச்சியமும் சிவப்பு வலயத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலிய இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் குண்டுவீச்சுக்கு உள்ளான பாலஸ்தீனம் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு எனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மே 1, 2024 நிலவரப்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்ட 35,000 க்கும் மேற்பட்டவர்களில் குறைந்தது 97 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் அடங்குவர். இவர்களில் 92 பாலஸ்தீனியர்கள், 2 இஸ்ரேலியர்கள் மற்றும் 3 லெபனானியர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 16 ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும், 4 ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 25 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் Reporters Without Borders அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.