வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக 2,000 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதா?
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக அரசாங்கம் 2.0 பில்லியன் ( இரண்டாயிரம் மில்லியன் ரூபா) ஒதுக்கியிருப்பதே சரியான நிதி ஒதுக்கீடாகும் என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.
by Anonymous |
நவம்பர் 13, 2023
2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதி குறித்து சமூக வலைதளங்களில் முரண்பாடான சில தரவுகளை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது. குறிப்பாக “வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு கிழக்குக்கு அதிக நிதி ஒதுக்கீடு.. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக 2,000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க” என்ற ட்விட்டர் பதிவொன்று காணப்பட்டது.
வரவு செலவு திட்டம் குறித்த செய்திகளை வெளியிட்டுள்ள பிரதான தமிழ் ஊடகமான வீரகேசரியின் இணையதளத்திலும் அதன் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக 2,000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு என்ற செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.
பட்டிநியூஸ் (http://www.battinews.com/)என்ற இணையதளத்திலும் வடக்கு கிழக்கிற்கு 2000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு என்ற செய்தியே பிரசுரிக்கப்பட்டிருந்தது.
எனினும் இது தொடர்பில் factseeker ஆராய்ந்து பார்த்ததில் குறித்த ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்திகளில் நிதி ஒதுக்கீடு குறித்து தவறுகள் இருப்பதை அவதானிக்க முடிந்தது.
நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட அறிக்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக அரசாங்கம் 2.0 பில்லியன் ( இரண்டாயிரம் மில்லியன் ரூபா) ஒதுக்கியிருப்பதே சரியான நிதி ஒதுக்கீடாகும் என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.