அநுரவின் கூட்டத்தின்போது தமிழ் இளைஞன் அரங்கை விட்டு வெளியேற்றப்பட்டாரா?
தேசிய மக்கள் சக்தியினால், கனடாவின் டொரென்டோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பின் போது இளைஞன் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வியொன்றை கேட்டதை அடுத்து அந்த இளைஞனை அரங்கை விட்டு வெளியேற்றியதாக காணொளியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது
by Anonymous |
மார்ச் 27, 2024
பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயகவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினால், கனடாவின் டொரென்டோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பின் போது இளைஞன் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வியொன்றை கேட்டதை அடுத்து அந்த இளைஞனை அரங்கை விட்டு வெளியேற்றியதாக காணொளியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இந்த இளைஞன் ஏன் அரங்கைவிட்டு வெளியேற்றப்பட்டார் என்ற கேள்விகளும், விமர்சனங்களும் எக்ஸ் தளத்தில் எழுப்பப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இந்த நிகழ்வில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றதா? உண்மையில் நடந்த சம்பவம் என்ன என்பதை factseeker ஆராய்ந்து பார்த்தபோது, கேள்வி எழுப்பிய இளைஞன் அரங்கை விட்டு வெளியேற்றப்படவில்லை என்பதையும், குறித்த இளைஞனின் கேள்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக பதில் தெரிவித்துள்ளார் என்பதையும் factseeker இனால் கண்டறிய முடிந்தது.
அத்துடன், குறித்த நிகழ்வில் பங்குபற்றிய வேறொரு நபர் நிகழ்வின்போது தொடர்ச்சியாக கருத்துக்களை வெளிப்படுத்தி, நிகழ்வில் ஏனையோர் கலந்துரையாட இடமளிக்காது இடையூறு விளைவித்த வேளையில், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளினால் அவர் வெளியேற்றப்பட்டதாகவும், நிகழ்வில் கேள்வி எழுப்பியிருந்த குறித்த இளைஞனின் கேள்விக்கு அனுரகுமார திசாநாயக பதில் தெரிவித்திருந்தார் எனவும் தேசிய மக்கள் சக்தியினர் factseekerஇடம் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு தொடர்பான முழுமையான காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது,
நிகழ்வில், குறித்த இளைஞன் கேள்வி எழுப்புவதையும் அதற்கு அனுரகுமார திசாநாயக வழங்கிய பதிலையும் இங்கே பார்க்கலாம்.
link :https://youtu.be/vIJqwQOJ97Q?t=8602
முடிவு :
ஆகவே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதைப்போன்று, கனடாவில் டொரென்டோ நகரில் நடத்திய மக்கள் சந்திப்பின் போது இளைஞன் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வியொன்றை கேட்டதை அடுத்து அவரை அரங்கை விட்டு வெளியேற்றியதாக பகிரப்படும் கருத்து உண்மையல்ல என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.