மாத்தளை – எல்கடுவ பகுதியில் இடம்பெற்ற சம்பவம் இன முரண்பாடு அல்ல
இந்த சம்பவம் தமிழ், சிங்கள இன முரண்பாடாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்ற போதிலும் அது உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.
by Anonymous |
ஆகஸ்ட் 22, 2023
மாத்தளை – எல்கடுவ – ரத்வத்தை பகுதியிலுள்ள அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்று சமூக ஊடகங்களில் இனவாதக் கருத்துக்களுடன் பகிரப்பட்டு வருவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது. “அப்பாவி தமிழ் மக்களின் வீடுகளை அடித்து நொறுக்கும் சிங்கள கிராமவாசிகள்.. இந்தியாவை போன்று இலங்கையிலும் சிறுபான்மையின மக்கள் மீது கட்டவிழ்த்தப்படும் வன்முறை” என பதிவிடப்பட்டு இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றது.
எனினும் இந்த சம்பவத்தின் உண்மைப் பின்னணியானது, மாத்தளை – எல்கடுவ – ரத்வத்தை பகுதியிலுள்ள ராமச்சந்திரன் என்பவரின் குடும்பத்திற்காக தோட்ட நிர்வாகத்தினால் 3 வருடங்களுக்கு முன்னர் காணியொன்று வழங்கப்பட்டுள்ளது. வறுமை காரணமாக குறித்த காணியில் அவரால் வீடொன்றை நிர்மாணிக்க முடியாது போயுள்ளது. இதையடுத்து, தன்னிடமிருந்த பணத்தை கொண்டு, வீடொன்றை அமைத்துக்கொள்ளும் வகையில் காணியை அவர் தயார்ப்படுத்தியுள்ளார். இவ்வாறு தயார்ப்படுத்தப்பட்ட காணியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்காலிக வீடொன்றை அமைக்க ராமச்சந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த நிலையில், எல்கடுவ தோட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த உதவி முகாமையாளர், வீடு அமைந்துள்ள பகுதிக்கு கடந்த 19ஆம் திகதி வருகை தந்து குறித்த வீட்டை உடைக்குமாறு குடும்பத்தாருக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த காணியில் முறையற்ற விதத்தில் வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே, குறித்த உதவி முகாமையாளர் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், தமக்கு தோட்ட நிர்வாகத்தினால் இந்த காணி வழங்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 50 ஆயிரம் ரூபா செலவிட்டு இந்த வீட்டை நிர்மாணித்துள்ளதாகவும் ராமச்சந்திரன், எல்கடுவ தோட்ட உதவி முகாமையாளருக்கு தெரிவித்துள்ளார். அதனை பொருட்படுத்தாத தோட்ட உதவி முகாமையாளர், ராமச்சந்திரனின் குடும்பத்தாரை தகாத வார்த்தைகளினால் திட்டி, குறித்த வீட்டை தானே உடைத்தெறிந்துள்ளார்.
இவ்வாறு உதவி முகாமையாளரினால் வீடு உடைக்கப்பட்ட விதத்தை, ராமச்சந்திரன் மகன் குணசீலன் என்பவர் தனது கையடக்கத் தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்தக் காணொளியே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த சம்பவம் தமிழ், சிங்கள இன முரண்பாடாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்ற போதிலும் அது உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை Factseeker உறுதிப்படுத்துகின்றது.