“கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் கிடைக்கும் தடயங்கள்” என உண்மைக்கு புறம்பான செய்திகள் பரவுகின்றன
“வரிசையில் நிற்கவைக்கப்பட்டு, கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டமைக்கான தடயங்கள் அகப்பட்டுள்ளன” என பகிரப்படும் ட்விட்டர் பதிவு உண்மைக்கு புறம்பானது
by Anonymous |
செப்டம்பர் 18, 2023
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் அது குறித்து செய்திகள், காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் கருத்துக்கள் என்பன சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின்போது அங்கு கண்டெடுக்கப்படும் சடலங்கள் “வரிசையில் நிற்கவைக்கப்பட்டு, கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டமைக்கான தடயங்கள் அகப்பட்டுள்ள” என்ற பதிவொன்று ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இது குறித்து அகழ்வுப்பணிகளை நேரடியாக கண்காணிக்கும் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவாவிடம் factseeker வினவியபோது, “கடந்த ஏழு நாட்களாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் உடல்கள் கிடைக்கவில்லை” என தெரிவித்தார்.
அத்துடன், “கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணிகள் கடந்த (13) புதன்கிழமை ஏழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட 6ஆம் திகதியில் இருந்து பணிகளை கண்காணிக்க காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில் இரண்டு வழக்கறிஞர்கள் நேரடியாக பார்வையிடுவதுடன்,சிவில் பிரதிநிதிகள் சிலரும் பொலிசாரும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். ஆகவே சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தியில் குறிப்பிடுவதைப்போன்று எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை” எனவும் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.
முடிவு
ஆகவே “வரிசையில் நிற்கவைக்கப்பட்டு, கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டமைக்கான தடயங்கள் அகப்பட்டுள்ளன” என பகிரப்படும் ட்விட்டர் பதிவு உண்மைக்கு புறம்பானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.