சனத் நிஷாந்தவின் மரணத்தை கொண்டாட பால்சோறு சமைக்கப்பட்டதாக போலிச்செய்தி
சனத் நிஷாந்தவின் மறைவால் மகிழ்ச்சியடைந்த மக்கள் நெடுஞ்சாலையில் பால்சோறு சமைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் புகைப்படமொன்றும் பகிரப்பட்டு வருகின்றது
by Anonymous |
ஜனவரி 26, 2024
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நேற்று (25) காலை விபத்தில் உயிரிழந்ததையடுத்து, இது தொடர்பில் சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. சனத் நிஷாந்தவின் மறைவால் மகிழ்ச்சியடைந்த மக்கள் நெடுஞ்சாலையில் பால்சோறு சமைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் புகைப்படமொன்றும் பகிரப்பட்டு வருகின்றது.
சனத் நிஷாந்தவின் மரணத்தினால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதையும், பால்சோறு சமைத்து மகிழ்ச்சியை கொண்டாடுவதாகவும் தெரிவித்து, “பொரளையின் தற்போதைய நிலைமை” என குறிப்பிடப்பட்ட புகைப்படமொன்று முகநூல் பக்கத்தில் பரப்பப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் தமது கருத்துக்களை பகிர்ந்து வருவதையும் factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
எனவே, இதன் உண்மைத்தன்மையை factseeker ஆராய்ந்து பார்த்ததில், இது தவறாக பகிரப்படும் செய்தி என்பதை கண்டறிய முடிந்தது. குறிப்பாக கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் ஆராய்ந்துபார்த்ததில், இந்தப் புகைப்படம் 2022ல் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
https://twitter.com/Dailymirror_SL/status/1523710560692449280
2022ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்ச அறிவித்ததை அடுத்து, பஞ்சிகாவத்தை பிரதான வீதியில் மக்கள் பால்சோறு சமைத்த போது எடுக்கப்பட்ட புகைப்படமே இதுவாகும். இதனை dailymirror ஊடகம் அதன் எக்ஸ் தளத்தில் கடந்த 2022 ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி பதிவிட்டிருந்தமை இங்கே இணைக்கப்பட்டுள்ளது,
எனவே, சனத் நிஷாந்தவின் மரணத்தினால் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக பகிரப்படும் புகைப்படம் போலியானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.