பிமல் ரத்னாயகவின் பெயரில் போலிப்பதிவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்திற்குப் பதிலளிக்கும் வகையில் இந்த பதிவு இடப்பட்டுள்ளதாக பகிரப்பட்டு வருகின்றது.
by Anonymous |
ஜனவரி 26, 2024
“இயற்கை தண்டிக்க ஆரம்பித்துவிட்டது” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தனது உத்தியோகபூர்வ சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டதாக பதிவொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்திற்குப் பதிலளிக்கும் வகையில் இந்த பதிவு இடப்பட்டுள்ளதாகக் கூறியே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில், இது உண்மையில் பிமல் ரத்நாயக்கவினால் வெளியிடப்பட்ட பதிவா என factseeker ஆராய்ந்து பார்த்தது.
“நான் புத்த மதத்தை ஏற்கவில்லை, ஆனால் நான் கர்மாவை ஏற்றுக்கொள்கிறேன். இயற்கை தண்டனை விதிக்கத் தொடங்கியுள்ளது.” என பகிரப்படும் பதிவு பிமல் ரத்நாயக்கவின் உத்தியோகபூர்வ முகநூல் மற்றும் எக்ஸ் கணக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவரது உத்தியோகபூர்வ சமூக வலைதளக் கணக்குகள் எதிலும் அத்தகைய பதிவுகள் பதிவிட்டிருக்கவில்லை.
இது குறித்து factseeker,பிமல் ரத்நாயக்கவிடம் வினவியபோதும், அவர் அப்படியொரு கருத்தை ஒருபோதும் பதிவிடவில்லை என்றும் இது பொய்யான பதிவு எனவும் தெரிவித்தார்.
அதன்படி, இந்தப் பதிவானது போலியானது என்பதை factseeker இனால் உறுதிப்படுத்த முடிந்தது.