வானிலைத் திணைக்களத்தின் இணையதளத்தில் தெரண செய்தியின் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறும் போலிச்செய்தி

வானிலைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் எந்தவொரு செய்தி நிறுவனத்தின் அல்லது வேறு எந்த வெளி செயற்பாடுகளும் பிரசுரிக்கப்படுவதில்லை.
by Anonymous |
டிசம்பர் 11, 2025

நாட்டில் ஏற்பட்ட பேரிடரை அடுத்து கடந்த சில நாட்களாக இயற்கை அனர்த்தம் தொடர்பிலான முன்னெச்சரிக்கை குறித்து சமூக வலைதளங்களில் அதிகளவில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறிப்பாக வானிலைத் திணைக்களத்தின் நிறைவேற்று பணிப்பாளர் தெரண தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலை அடிப்படையாக வைத்தே இந்த விமர்சனங்கள் எழுந்திருந்தன .
இதற்கிடையில், வானிலைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் தெரண தொலைக்காட்சியின் செய்தி ஒளிபரப்பின் காட்சிகளை வெளிப்படுத்தியதாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker அவதானித்தது.
நவம்பர் 12 ஆம் திகதி, வானிலைத் திணைக்களத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க தெரிவித்த கருத்துக்கள் என மேற்கோள் காட்டியே, இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்தன.
இந்த பதிவுகள் டிசம்பர் மாதம் 8ஆம் திகதியில் இருந்து சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற காரணத்தினால் இதன் உண்மைத்தன்மையை factseeker ஆராய தீர்மானித்தது.
தெரண தொலைக்காட்சியில் இந்த செய்தியானது கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி ஒளிபரப்பாகியுள்ளதுடன், அந்த செய்தியில் கடந்த 12ஆம் திகதி வானிலைத் திணைக்களத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க கூறிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
link :- https://www.youtube.com/live/ydeWAmqZFsM?t=2284s
ஆகவே கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வரையில் வானிலைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இவ்வாறான செய்திகள் பிரசுரிக்கப்பட்டதா என ஆராய்ந்ததில் அவ்வாறான எந்தவொரு பதிவையும் அவதானிக்க முடியவில்லை.
அதற்கு முன்னரும் வானிலைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எந்தவொரு செய்தி நிறுவனத்தின் செய்திகளும் இவ்வாறு பிரசுரமாகி இருக்கவுமில்லை.

ஆகவே வானிலைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எந்தவொரு செய்தி நிறுவனத்தின் அல்லது வேறு எந்த வெளி செயற்பாடுகளும் பிரசுரமாகாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது.
மேலும், இது குறித்து வானிலைத் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் factseeker தொடர்புகொண்டு வினவியபோது, அத்தகைய செய்தி வெளியீடு எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
ஆகவே, வானிலைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தெரண தொலைக்காட்சியின் செய்தி ஒளிபரப்பின் காட்சிகளை வெளிப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் படங்கள் தவறானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்தியுள்ளது.
