வரவு – செலவு திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் பிரதமர் ஹரிணி -சாமர எம்.பி இருவரது தரவுகளும் சரியானதே

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இருவரும் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்து தெரிவித்த தரவுகள் சரியானவை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.
by Anonymous |
நவம்பர் 26, 2025

வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் ‘ கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி” அமைச்சுகள் மீதான விவாதம் கடந்த (25.11.2025) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கருத்து தெரிவித்திருந்த பிரதமரும் ,கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய, பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு வரவு -செலவு திட்டத்தில் கல்வி அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இது எனவும், அந்த தொகை 7.04 பில்லியன் ரூபாய்கள் எனவும், இது மொத்த தேசிய உற்பத்தியில் 2.04 சதவீகிதம் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

பிரதமரின் இந்தக் கருத்துக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, பந்துல குணவர்தன அவர்கள் அமைச்சராக இருந்த காலத்தில் தான் இந்த சாதனை இருந்ததாகவும், பின்னர் அகில விராஜ் காரியவசம் அமைச்சராக இருந்த காலத்தில் 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் அதிகளவு தொகை ஒதுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனை அடுத்து, ஒவ்வொரு ஆண்டும் வரவு -செலவு திட்டத்தில் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு சதவீதம் குறித்து factseeker ஆராய்ந்து பார்த்தது.
தரவுகள் இங்கே,

அதன்படி,அகில விராஜ் காரியவசம் கல்வி அமைச்சராக இருந்த காலகட்டத்தில், 2015 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.11% ஆக இருந்த கல்விக்கான நிதி ஒதுக்கீடு,2016 ஆம் ஆண்டில் 3.23% ஆக அதிகரிக்கப்பட்டது. பின்னர்,கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி சதவீதமானது 2017 ஆம் ஆண்டில் 2.59% ஆகவும் காணப்பட்டது.
அதன்படி, அமைச்சர்களான பந்துல்ல குணவர்த்தன, அகில விராஜ் காரியவசம் ஆகியோர் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் கூற்று உண்மையாகும்.
அதேபோல் தற்போதைய கல்வி அமைச்சரும்,பிரதமருமான ஹரணி அமரசூரிய- நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு கல்விக்கு அதிக சதவிகித நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறுவதும் உண்மையாகும்.
ஏனெனில், 2018 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலான 7 ஆண்டு காலப்பகுதிக்கு பின்னர், 2026 ஆம் ஆண்டில் மீண்டும் கல்விக்காக அதிக சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையே பிரதமர் ஹரணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
ஆகவே நாடாளுமன்றத்தில் பிரதமர் ஹரணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக ஆகியோர் விவாதித்த விடயங்கள் இரண்டுமே தரவுகள் அடிப்படையில் சரியானவை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.