தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீசல் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் கூற்று தவறானது

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் 24.00 ரூபாவினால் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
by Anonymous |
செப்டம்பர் 9, 2025

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் டீசல் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன நிகழ்வொன்றில் தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதுடன் அது குறித்த விமர்சனங்களும் எழுந்துள்ளன.
செய்தி கீழே:
https://www.facebook.com/share/v/1EMJNvrcjS/
கடந்த சில மாதங்களில் டீசல் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளும் அதற்கு சமாந்தரமான விலையினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இது மக்களுக்கு பல நன்மைகளை பெற்றுக்கொடுத்துள்ளது எனவும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சரின் இந்தக் கருத்து தொடர்பில் factseeker ஆராய்ந்தபோது, நாட்டில் எரிபொருள் விலைகள் தொடர்பாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து அவதானம் செலுத்தியது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கதின் கீழ் கடந்த ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட செய்திக்குறிப்பை factseeker அவதானித்தது. அந்த காலகட்டத்தில் ரூ.307.00 ஆக இருந்த ஒரு லிட்டர் லங்கா வெள்ளை டீசல் விலை ரூ.283.00 ஆகக் குறைக்கப்படிருந்தது. அதேபோல், ரூ.352.00 ஆக இருந்த லங்கா சூப்பர் டீசல் 319.00 ஆகவும், ரூ.332.00 ஆக இருந்த லங்கா பெட்ரோல் 92 ஆக்டேன் 311.00 ஆகவும் குறைக்கப்படிருந்தது.
முன்னாள் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, 2022 நவம்பர் 19ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பித்த முன்மொழிவின்படியே, எரிபொருள் விலைகளில் மாதாந்த விலை திருத்தம் டிசம்பர் 2022 முதல் அமல்படுத்தப்பட்டது. அதற்கமைய மாதத்திற்கு ஒரு முறை எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டன, மேலும் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரும், மாதத்திற்கு ஒரு முறை எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டன. இந்த திருத்தங்களுக்கு அமைய விலைகள் குறைந்த நேரங்களும் அதேபோல் விலைகள் அதிகரித்த சந்தர்ப்பங்களும் இருந்தன.
தற்போதைய அரசாங்கம் கடைசியாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி அன்று எரிபொருள் விலையை திருத்தியுள்ளது. இறுதியான திருத்தத்திற்கு அமைய ஒரு லிட்டர் லங்கா வெள்ளை டீசலின் விலையை ரூ. 289.00 லிருந்து ரூ. 283.00 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, ஒரு லிட்டர் வெள்ளை டீசலின் விலை ரூ. 6, சூப்பர் டீசலின் விலை ரூ. 12, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் ஒரு லிட்டர் ரூ. 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மாதம் ஆக்டேன் 95 பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் திருத்தப்படாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இந்த தரவுகளுக்கு அமைய, 2024.09.30 நிலவரப்படி, ரூ. 307 ஆக இருந்த 1 லிட்டர் லங்கா வெள்ளை டீசலின் விலையானது, தற்போது (2025.08.31 ) ரூ. 283.00 ஆக திருத்தப்பட்டுள்ளது. ஆகவே குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் 24.00 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரதி அமைச்சர் கூறுவது போல் டீசல் விலையானது 120 ரூபாவினால் குறையவில்லை என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
ஆகவே, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து டீசல் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.