ஊடகங்களை அச்சுறுத்தும் விதத்தில் சீன தூதரகம் அனுப்பியதாக பகிரப்படும் போலிக் கடிதம்

சீன தூதரகத்தினால் இவ்வாறன கடிதமொன்று ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், இது முற்று முழுதாக போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் எனவும் தூதரகம் தெரிவித்தது
by Anonymous |
ஆகஸ்ட் 6, 2025

இலங்கை ஊடகங்களுக்கு சீனத் தூதரகம் அழுத்தம் கொடுக்கும் விதமாக சீன தூதரகத்தினால் பிரதான ஊடகங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கடிதமொன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இந்தக் கடிதம் மூன்று பக்கங்களை கொண்டுள்ளதுடன் இதில் இலங்கையின் ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தும் விதத்திலான காரணிகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் இந்த விடயம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயமானது,
” சீன மக்கள் குடியரசின் இலங்கைத் தூதரகம், BYD Auto Co., Ltd. நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் தொடர்பான சமீபத்திய ஊடக அறிக்கைகள் குறித்து கடுமையான கவலையை வெளிப்படுத்தி, அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கும் ஒரு முறையான கடிதத்தை அனுப்பியுள்ளது. பல கட்டுரைகள், தொழில்நுட்ப தவறான தகவல்கள், சுங்க முறைகேடுகள் மற்றும் வரி மோசடி பற்றிய ஊக மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை உத்தியோகபூர்வ விளக்கமின்றி வெளியிட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. இது BYD மற்றும் சீன மக்கள் குடியரசின் நற்பெயருக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சீன நிறுவனங்கள் பற்றிய மேலதிக சார்புடைய அல்லது சரிபார்க்கப்படாத உள்ளடக்கத்தை வெளியிடுவதில் இருந்து உடனடியாக விலகிக்கொள்ளுமாறு அனைத்து ஊடக தளங்களுக்கும் ஒரு முறையான கோரிக்கையை கடிதம் விடுக்கிறது, அவ்வாறு செய்யத் தவறினால் அவதூறுக்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எச்சரிக்கிறது. மேலும், இருதரப்பு உறவுகளைப் பாதுகாக்க தொழில்முறை, துல்லியமான மற்றும் பரஸ்பர மரியாதைக்குரிய அறிக்கை அவசியம் என்பதை வலியுறுத்தி, சீனாவையும் அதன் வணிகங்களையும் இழிவுபடுத்தும் செயற்பாடுகளை தவிர்க்க ஊடக நிறுவனங்களுக்கு வழிகாட்டல்களை வழங்குமாறு வெகுஜன ஊடக அமைச்சகத்திடம் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.” என சமூக வலைதளங்களில் பகிரப்படும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சீன தூதரகம் பிரதான ஊடகங்களுக்கு அவ்வாறான கடிதம் ஒன்றை அணிப்பியதாக எந்த ஊடகங்களும் உறுதிப்படுத்தவில்லை. அந்த செய்தி பிரதான ஊடகங்களில் பிரசுரமாகியிருக்கவும் இல்லை.
இது குறித்து factseeker சீன தூதரகத்திடம் வினவியபோது, அவ்வாறான எந்தவொரு கடிதமும் சீன தூதரகத்தினால் ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், இது முற்று முழுதாக போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் எனவும் தூதரகம் தெரிவித்தது.
சீன தூதரகம் அவ்வாறான கடிதம் ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தால் அது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருக்க முடியும், ஆனால் அவ்வாறான எந்தவொரு நிகழ்வும் இடம்பெறவில்லை. இலங்கையில் உள்ள சீன தூதரகம் இலங்கையில் உள்ள மூன்று மொழி ஊடகங்களுடனும் நட்புறவுடனும் நெருக்கமாகவும் செயற்படுகின்றது எனவும் சீன தூதரகம் அறிவித்தது.