விஜயின் கட்சியில் ஜோன் சீனா இணைந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

தமிழக வெற்றி கழகத்தில் ஜோன் சீனா இணைந்ததாக பகிரப்படும் புகைப்படம் நடிகர் கார்த்தி மற்றும் மல்யுத்த வீரர் ஜோன் சீனா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமாகும்.
by Anonymous |
மார்ச் 4, 2025

அமெரிக்காவை சேர்ந்த மல்யுத்த வீரரான ஜோன் சீனாவை தென்னிந்திய தமிழ் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் சந்தித்ததாக புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
“தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார் மல்யுத்த வீரர் ஜோன் சீனா” என்ற பதிவுடனேயே இப் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றது. இப் பதிவானது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
நடிகர் விஜயினதும், தமிழக வெற்றி கழகத்தினதும் உத்தியோகபூர்வ சமூகவலைதள பக்கங்களில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதா என ஆராய்ந்ததில், இது போன்ற எந்தவொரு புகைப்படமும் வெளியாகவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. மேலும், இது குறித்த எந்தவொரு உத்தியோகபூர்வ செய்திகளும் வெளியாகவில்லை என்பதையும் அறிய முடிந்தது.
ஜோன் சீனா நடிகர் விஜயுடன் இருப்பதை போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற அப் புகைப்படத்தை google reverse image search மூலம் ஆராய்ந்ததில், இப் புகைப்படத்தின் உண்மையான புகைப்படத்தை அவதானிக்க முடிந்தது. இந்த புகைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி நடிகர் கார்த்தி மற்றும் மல்யுத்த வீரர் ஜோன் சீனா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமாகும்.
இப் புகைப்படம் கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற WWE சூப்பர்ஸ்டார் ஸ்பெக்டாக்கிள் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும். இப் புகைப்படத்தை நடிகர் கார்த்தி தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
ஆகவே, மல்யுத்த வீரரான ஜோன் சீனாவை நடிகர் விஜய் சந்தித்தாக சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற புகைப்படம் திரிபுபடுத்தப்பட்ட புகைப்படம் என்பதையும் தமிழக வெற்றி கழகத்தில் ஜோன் சீனா இணைந்ததாக பகிரப்படும் செய்தி போலியானது என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.