மதூஷின் இறுதி கிரிகையில் ஜனாதிபதி கலந்துகொண்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மதூஷின் உடலுக்கு மரியாதை செலுத்துவது போன்று பகிரப்படுகின்ற புகைப்படம் திரிபுப்படுத்தப்பட்ட புகைப்படம் ஆகும்.
by Anonymous |
பிப்ரவரி 25, 2025

சமரசிங்க ஆரச்சிலாகே மதூஷ் லக்ஷித என அழைக்கப்படும் மாகந்துரே மதூஷின் இறுதி கிரிகையில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக தெரிவித்து புகைப்படமொன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
https://www.facebook.com/share/p/1FEo9W7qZv/
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மதூஷின் இறுதி கிரிகையில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்துவது போன்ற புகைப்படம் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் இறுதி கிரிகை ஒன்றில் கலந்து கொண்டுள்ள புகைப்படம் ஆகியவையே இவ்வாறு பகிரப்பட்டு வருகின்றன.
இவை சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்தது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மதூஷின் உடலுக்கு மரியாதை செலுத்துவது போன்று பகிரப்படுகின்ற புகைப்படத்தை Google Reverse Image மூலம் ஆராய்ந்ததில் அதன் அசல் புகைப்படத்தை கண்டறிய முடிந்தது. உண்மையான புகைப்படத்தை திரிபுபடுத்தியே இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை இதன்போது உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், இரண்டாவது புகைப்படமானது மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவரது உறவினரின் மரண நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரிய வந்த நிலையில், இது குறித்து மக்கள் விடுதலை முன்னையின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிடம் FactSeeker வினவிய போது, இந்த புகைப்படமானது தனது தாயாரின் இறுதிச் சடங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை உறுதிப்படுத்தினார்.
இது குறித்து மேலும் ஆராய்ந்ததில், சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற இப் பதிவு தொடர்பாக அராசாங்க தகவல் திணைக்களத்தினால் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்றையும் அவதானிக்க முடிந்தது. உறுதிப்படுத்தப்பட்ட மூலங்கள் இன்றி பதிவிடப்பட்டுள்ள இப் பதிவு தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு அதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இக் கடிதத்தின் ஊடக பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மாகந்துரே மதூஷின் இறுதி கிரிகையில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கலந்துக்கொண்டதாக சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற புகைப்பட பதிவுகள் போலியானவை என்பதையும் அப் புகைப்படங்களில் ஒரு புகைப்படம் திரிபுப்படுத்தப்பட்ட புகைப்படம் என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகின்றது.
sinhala
|