ஜனாதிபதி அநுர தனது தாயாரை பார்வையிட ஹெலியில் வந்ததாக பரவும் போலி செய்தி
கொழும்பு லங்கா வைத்தியசாலையின் மேல் பகுதியில் உலங்கு வானூர்தி (helicopter) ஒன்று கீழே இறங்குவது போன்ற காணொளியே இவ்வாறான செய்திகள் பகிரப்படுவதற்கு மூலமாக அமைந்துள்ளது.
by Anonymous |
டிசம்பர் 24, 2024
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் தனது தாயாரை பார்வையிட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உலங்கு வானூர்தியில் (helicopter) வந்ததாகவும் ஜனாதிபதியின் தாயார் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து கொழும்பு லங்கா வைத்தியசாலைக்கு உலங்கு வானூர்தி (helicopter) மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் பதிவுகள் சில சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இது போன்ற பதிவுகள் பல சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இவ்வாறான பதிவுகள் சமூகவலைதளங்களில் பகிரப்படுவதற்கு மூலமாக உள்ள காணொளி ஒன்றையும் FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது. கொழும்பு லங்கா வைத்தியசாலையின் மேல் பகுதியில் உலங்கு வானூர்தி ஒன்று கீழே இறங்குவது போன்ற காணொளியே இவ்வாறான பதிவுகள் பகிரப்படுவதற்கு மூலமாக அமைந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
https://www.facebook.com/kasun.gunasingha.9/videos/1126458958862890
அக் காணொளியை ஆராய்ந்ததில், இது கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி அன்று கொழும்பு லங்கா வைத்தியசாலையில் விமானப்படையின் தீ அணைப்பு மற்றும் மீட்பு குழுவுக்கு வழங்கப்பட்ட பயிற்சி நிகழ்வின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இது தொடர்பாக “ஹிரு” தொலைக்காட்சியிலும் விமானப்படையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
https://www.facebook.com/watch/?ref=embed_video&v=1795228264572704
https://www.facebook.com/share/v/1ETdka8F9m/
மேலும், இது குறித்து கொழும்பு லங்கா வைத்தியசாலையின் அதிகாரிகளிடம் FactSeeker வினவிய போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தாயார் எமது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கொழும்பு லங்கா வைத்தியசாலைக்கு வருகை தரவில்லை என்றும் தெரிவித்தனர்.
ஆகவே, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் தனது தாயாரை பார்வையிட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உலங்கு வானூர்தியில் வந்ததாகவும் ஜனாதிபதியின் தாயார் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து கொழும்பு லங்கா வைத்தியசாலைக்கு உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற பதிவுகள் உண்மைக்கு புறம்பானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.