சீன நன்கொடையால் வழங்கப்பட்ட சீருடைத் துணிகள்: முன்னாள் கல்வி அமைச்சரின் பங்களிப்பா?
சீன அரசாங்கத்தின் நன்கொடையாக பெறப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்கான துணிகளை, சீன தூதுவர் Qi Zhenhong கடந்த டிசம்பர் 10 அன்று கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் (CICT) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
by Anonymous |
டிசம்பர் 20, 2024
2025 ஆம் ஆண்டுக்கான சீனா அரசாங்கத்தின் நன்கொடையாக பெறப்பட்ட பாடசாலை சீருடைகளுக்கான துணிகளை பெறுவதற்கு பங்களித்தது, தற்போதைய அரசாங்கத்தின் கல்வி அமைச்சரா அல்லது கடந்த அரசாங்கத்தின் கல்வி அமைச்சரா என்பது தொடர்பில் சமூகவலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.
வாசகர்களுக்கு இது குறித்த விளக்கத்தை அளிக்க FactSeeker எண்ணியது.
சீனத் தூதுவர் Qi Zhenhong கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி சீன அரசாங்கத்திடம் நன்கொடையாக பெற்ற பாடசாலை சீருடைகளுக்கான துணிகளை கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் (CICT) கையளித்தார். இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிக்கைகளையும் அவதானிக்க முடிந்தது.
http://lk.china-embassy.gov.cn/eng/xwdt/202412/t20241212_11543113.htm
பிரதமர் அலுவலக ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலில், 2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைக்கான தேவை 11,817 மில்லியன் மீற்றர் துணிகள் எனவும், பாடசாலை சீருடைகள் வழங்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 4,640,086 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தேவை அனைத்தையும் சீனா அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்ததில், கல்வி அமைச்சினால் 18.09.2024 அன்று வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையை அவதானிக்க முடிந்தது.
இவ் அறிக்கையில், முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் நடவடிக்கைகளின் விளைவாக, 2025 ஆண்டு தொடக்கத்திற்காக மாணவர்களுக்கு தேவையான அனைத்து சீருடைகள் சீன அரசால் வழங்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தது. மேலும், இந்த சீருடைகள் 100% இலவசமாக வழங்கப்படுவதால், அரசாங்கத்திற்கு 7,000 மில்லியன் ரூபாய் செலவு குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த நவம்பர் மாதம் 4ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவொன்றையும் காணக்கூடியதாக இருந்தது.
பாராளுமன்ற தேர்தலின் போது முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்து தெரிவித்த காணொளியையும் அவதானிக்க முடிந்தது. அதில் “தாம் அதிகார பூர்வமாக மேற்கொண்ட நடவடிக்கைகளில், 2023ஆம் ஆண்டுக்கான தேவையில் 70%, 2024 ஆம் ஆண்டுக்கான தேவையில் 80%, மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான தேவையில் 100% சீன அரசின் உதவியுடன் கிடைத்ததாக” அவர் தெரிவித்திருந்தார்.
https://www.facebook.com/share/r/18Ujyx8qUJ/
மேலும், சீன தேசிய வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு ஆணையத்தால் செயற்படுத்தப்படும் “Belt and Road Portal” இணையதளம் இந்த சீருடை உற்பத்தி அளவுகளின் கணக்குகளை உறுதிப்படுத்தியுள்ளது.