இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய பணியாளர் ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக போலிச்செய்தி
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய பணியாளர்கள் ஆட்சேர்ப்பு எதுவும் இடம்பெறவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
by Anonymous |
டிசம்பர் 6, 2024
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு புதிய பணியாளர்களை நியமிக்க இருப்பதாகவும், உடனடியாக விண்ணப்பிக்குமாறும் செய்தியொன்று Whatsapp போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
அவ்வாறு பகிரப்பட்டுவருகின்ற செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
“இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு பணியாளர் ஆட்சேர்ப்பு 2024/2025″
தற்போது கிடைக்கக்கூடிய பல்வேறு பதவிகளுக்கு புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக இணைய விண்ணப்ப தளம் திறக்கப்பட்டுள்ளது, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். அனைத்து இலங்கைப் பொதுமக்களும் விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பங்கள் இலவசம். வேலை வாய்ப்புகள் ஆரம்பமாகிவிட்டன, இப்போதே விண்ணப்பியுங்கள். இந்த சிறந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள் ” என பகிரப்படும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி பலரால் பகிரப்படுவதால்,FactSeeker இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்தது.
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு புதிய பணியாளர்களை நியமிக்க எண்ணினால், அது வர்த்தமானி மூலம் மக்களுக்கு அறிவிக்கப்படும். ஆனால் அவ்வாறான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவிடம் FactSeeker வினவிய போது, அவ்வாறான பணியாளர்கள் ஆட்சேர்ப்பு எதுவும் இடம்பெறவில்லை எனவும் இது முற்றிலும் பொய்யான தகவல் எனவும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இது குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் தெரிவித்தார்.
மேலும், இவ்வாறான தவறான தகவல்களை நம்பி இணைப்புகளை (Link) அணுகுவதே தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என இணைய பாதுகாப்புக்கான தேசிய நிலையம் (Sri Lanka Cert ) தெரிவித்துள்ளது.
ஆகவே, இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு புதிய பணியாளர்களை நியமிக்க இருப்பதாகவும் உடனடியாக விண்ணப்பிக்குமாறும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்ற செய்திகள் போலியானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.