மாவீரர் தினம் குறித்து ஜனாதிபதியின் கையொப்பத்துடன் பகிரப்படும் அறிக்கை போலியானது

அங்கீகரிக்கப்பட்ட பிரதான ஊடகங்களிலோ அல்லது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ சமூக வலைதள பக்கங்கலில் கூட இவ்வாறான செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை
by Anonymous |
நவம்பர் 18, 2024

இலங்கையில் மாவீரர் தினத்தை நடத்த முழு அனுமதி என்ற தலைப்பில் ‘அதிர்வு’செய்தித்தளத்தில் வெளியாகியுள்ள செய்தி ஒன்றை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது. மேலும், அச் செய்தியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் கூடிய அறிக்கை ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிந்தது. அவ்வறிக்கை சமூக வலைதளங்களிலும் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியாகிய அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
“தமிழ் மக்களுக்கு வணக்கம்,நீண்ட நெடிய காலமாக தமது சுதந்திரத்திற்காகப் போராடி பல்லாயிரக் கணக்கான உயிர்களை இழந்து, வாழ்ந்து வரும் தமிழ் மக்களே.. போரின் போது உயிர் நீத்த உங்களின் பிள்ளைகள், பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்களை இம்மாதத்தில் பல இன்னல்களுக்கு மத்தியிலும் வணங்கி வந்திருக்கிறீர்கள்.இவ்வாண்டு முதல் இந்த நவம்பர் மாதத்தில் உங்களுக்காக உயிர்க்கொடைத் தியாகம் செய்தவர்களை நீங்கள் எந்த விதமான தடைகளும் இன்றி நிம்மதியாகவும் மிகவும் பாதுகாப்பாகவும் நினைவுகூர முடியும் என்பதுடன், இறந்தவர்களை இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஆலயங்கள்,பாடசாலைகள், அலுவலங்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டகளின்றி மிகவும் அமைதியான முறையில் யாருடைய தொந்தரவுகளும் இன்றி, நினைவேந்தல் செய்வதற்கான ஒரு அமைதியான சூழலை இன்று அடைந்துள்ளோம்.அப்படி ஒரு அமைதியான சூழலை இயற்கை தான் உருவாக்கித் தந்துள்ளது என்று நினைக்கின்றேன்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாவீரர் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் திகதி அன்று இழந்தவர்களை நினைவுகூரும் நாள். இது தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் நிகழ்வாகும். இதுவரை எந்த அரசாங்கமும் இதனை உத்தியோகபூர்வமாக அனுமதிக்கவில்லை. ஆனால், தற்போதைய ஜனாதிபதி இதற்கு அனுமதி வழங்கியதாக ‘அதிர்வு’மற்றும் பல செய்தி தளங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் FactSeeker வினவிய போது, “இலங்கையில் மாவீரர் தினத்தை நடத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனுமதி வழங்கியதாகக் கூறி எந்தவிதமான அறிக்கையும் வெளியிடவில்லை” என தெரிவித்தனர். அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட பிரதான ஊடகங்களில் இது ஒரு செய்தியாக வெளியிடப்பட்டிருக்கவில்லை. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ சமூக வலைதள பக்கங்கலில் கூட இவ்வாறான செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை என்பதையும் factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
ஆகவே, மாவீரர் தினம் நடத்த தற்போதைய அரசாங்கம் அனுமதி அளித்ததாகக் கூறும் செய்திகள் மற்றும் அது குறித்து ஜனாதிபதியின் கையொப்பத்துடன் பகிரப்படும் அறிக்கைகள் போலியானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.