9000 ஆசிரியர்களின் இடமாற்றம் அரசியல் பழிவாங்கலா?

4200 இடமாற்ற விண்ணப்பங்கள் அனைத்தும், பத்து வருடங்கள் ஒரே பாடசாலையில் பணிபுரிந்த ஆசிரியர்களின் விண்ணப்பங்கள்
by Anonymous |
நவம்பர் 3, 2024

அரசியல் தேவை மற்றும் பழிவாங்கும் நோக்கில் ஆசிரியர் இடமாற்றம் இடம்பெறுவதாக பதிவுகள் சில சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது. அப் பதிவுகள் சிலவற்றில் “தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பணியாற்றிய 9000 ஆசிரியர்கள் இடமாற்றம்.” என குறிப்பிடப்பட்டுள்ளன.
• https://www.facebook.com/share/p/T1NVL7qrMUcGACjV/
• https://www.facebook.com/share/p/g8WTScVXFoFCcXRt/
• https://www.facebook.com/share/p/eRCveeodEQFX33Ji/
தேர்தல் காலங்களில் இவ்வாறான பதிவுகள் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இது குறித்து ஆராய்ந்த போது கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதி வெளியான அருண பத்தரிகையின் செய்தி ஒன்றை அவதானிக்க முடிந்தது. அச் செய்தியில் “பத்து வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் சேவையாற்றிய 9000 தேசியப் பாடசாலை ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அமல் எதிரிசிங்கவிடம் FactSeeker வினவிய போது, வருடம்தோறும் ஆசிரியர்கள் தமது இடம்மாற்றத்திற்காக விண்ணப்பிப்பதாகவும் இவ்வருடம் 9000 க்கு மேல் விண்ணப்பங்கள் கிடைக்கபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சட்ட நிலவரப்படி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஒரே பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர்கள் கட்டாய இடமாற்றத்திற்கு உட்ப்படுவார்கள் என்றும் இதுவரை கிடைத்துள்ள 4200 இடமாற்ற விண்ணப்பங்கள் அனைத்தும், பத்து வருடங்கள் ஒரே பாடசாலையில் பணிபுரிந்த ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் என்றும் மற்ற விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களுக்காக விண்ணப்பித்த இடமாற்றக் கோரிக்கைகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான இறுதித் தீர்மானம் ஆசிரியர் இடமாற்ற சபையினால் மேற்கொள்ளப்படும் என்றும் அமல் எதிரிசிங்க மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் ஆராய்ந்ததில் ஆசிரியர் இடமாற்றக் தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 2007/20 சுற்றறிக்கையின் வர்த்தமானி அறிவித்தலை அவதானிக்க முடிந்தது.
• https://moe.gov.lk/wp-content/uploads/2020/07/2007-20s.pdf
ஆகவே, அருண பத்திரிகையில் குறிப்பிட்டுள்ள செய்து உண்மையானதாக இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள “பத்து வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் சேவையாற்றிய 9000 தேசியப் பாடசாலை ஆசிரியர்களுக்கு இடமாற்றம்” என்பது தவறானது என்பதையும் அனைத்து வகை இடமாற்றங்களின் மொத்த இடமாற்றங்கள் 9000 ஆகும் என்பதையும் FactSeeker உறுதிப்படுத்திகிறது.
மேலும், அரசியல் தேவை மற்றும் பழிவாங்கும் நோக்கில் ஆசிரியர் இடமாற்றம் இடம்பெறுவதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகள் போலியானவை என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.