கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்கா சென்றாரா?

61

மக்களின் எதிர்ப்பு போராட்டம் காரணமாக கடந்த ஜுலை மாதம் தனது பதவியை இராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது குடும்ப உறுப்பினர்களுடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி அமெரிக்காவிற்கு சென்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும் கோட்டாபய  ராஜபக்‌ஷ முதலில் டுபாய்க்கு சென்று, அதன் பின்னர் அமெரிக்காவிற்கு செல்லவிருப்பதாக சில செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இதற்கு முன்னரும் ஐக்கிய அமெரிக்காவினால் முன்னாள் ஜனாதிபதிக்கு  விசா வழங்க மறுத்திருந்த நிலையில், இம்முறை அவருக்கு எவ்வாறு விசா வழங்கப்பட்டது என சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.

கோட்டாபய ராஜபக்‌ஷ இதற்கு முன்னர் அமெரிக்க குடியுரிமை பெற்றவராவார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில், அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, இலங்கையின் அப்போதைய சட்டத்தின் பிரகாரம், இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒருவரை  இலங்கையின் ஜனாதிபதி பதவிக்கு  தேர்ந்தெடுக்க முடியாது என்ற நிலைமை காணப்பட்டது.
எவ்வாறாயினும், கோட்டாபய  ராஜபக்‌ஷ எப்போது தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொண்டார் என்பது குறித்து ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்களே வெளியாகின.

அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொண்ட  ஒருவருக்கு, அதன் பின்னர் சாதாரணமாக அமெரிக்காவிற்கு செல்வதற்குக்கூட விசா பெறுவது மிகவும் கடினமானதென தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில்,  அமெரிக்காவில் நிரந்தர வதிவிடத்திற்கான கிரீன் கார்ட் (Green Card) அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் விண்ணப்பித்ததாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

வழக்கமாக, கிரீன் கார்ட்  அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் கூட ஆகலாம்.

இந்நிலையில், டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ள Asian Tribune  பத்திரிகையின் ஆசிரியர் கே.டி.ராஜசிங்கம், கோட்டாபய  ராஜபக்‌ஷ டுபாயில் சில நாட்கள் தங்கியிருந்து அதன் பின்னர் வேறு ஐரோப்பிய நாட்டிற்கு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.அதேநேரம்,  முன்னாள் ஜனாதிபதி டுபாயில் (சொப்பிங்) பொருட்களை கொள்வனவு செய்யும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தன.

இதேவேளை, இலங்கையின் அரசியல் நிலவரம் குறித்து ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சஞ்சீ (Sanjee), கோட்டாபய  ராஜபக்‌ஷவுக்கு விசா வழங்குவதை  நிராகரித்தமைக்காக  அமெரிக்காவை  பாராட்டியுள்ளார்.

முடிவுரை

கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் ஒருவர் அனுப்பிய செய்தியின் அடிப்படையில், கோட்டாபய  ராஜபக்‌ஷ அமெரிக்காவுக்கு சென்றதாக கடந்த 26 ஆம் திகதி பல ஊடகங்கள் வெளியிட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது.

அவர் ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், அவர் இப்போதும் டுபாயில் வசித்து வருவதுடன், முன்னாள் ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து FactSeeker ற்கு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleගෝඨාභය රාජපක්ෂ ඇමෙරිකාවට ගියාද?
Next articleTraining program on “Countering Disinformation” for journalists and media professionals in Puttalam Distric